2015-12-02 15:23:00

மறைக்கல்வி உரை – அண்மை ஆப்ரிக்கத் திருத்தூதுப் பயணம்


டிச.02,2015. கடந்த வாரத்தில் ஆப்ரிக்காவின் மூன்று நாடுகளில் 6 நாள் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து இத்திங்கள் மாலை வத்திக்கான் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில் அத்திருப்பயணம் குறித்தே எடுத்துரைத்தார். ஆப்ரிக்காவின் கென்யா, உகாண்டா மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசுக்கான என் திருப்பயணத்தில், உயிர்த்த இயேசுவின் நம்பிக்கைச் செய்தியை நான் எடுத்துச் சென்றேன். இயற்கை வளமும் மனித வளமும் நிறைந்துள்ள கென்யாவில் நான் திருப்பயணம் மேற்கொண்டபோது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது, மற்றும் எல்லாரையும் ஒன்றிணைத்த, எல்லாருக்கும் சரிசமமான பங்களிப்பை வழங்கும், நிலையான முன்னேற்றத்தின் எடுத்துக்காட்டுகளாக திகழவேண்டிய உலகளாவிய சவால்கள் குறித்து எடுத்துரைத்தேன். மேலும், இளையோரை அமைதி மற்றும் உடன்பிறப்பு உணர்வுப் பாதைகளில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். மறைசாட்சிகளின் பூமியான உகாண்டாவில், கிறிஸ்தவ சமூகம் தங்களின் விசுவாசம் மற்றும் பிறரன்பில் நிலைத்திருக்குமாறு ஊக்கமளித்தேன். அதன் வழியாக அவர்கள், உகாண்டாவின் முழு சமூகத்திற்கும் புளிக்காரமாகச் செயலாற்றுவார்களாக. இதற்கு அடுத்தபடியாக நான் சென்ற நாடு மத்திய ஆப்ரிக்க குடியரசு. உள்நாட்டு மோதல்களையும் பெரும் வேதனைகளையும் அனுபவித்துவரும் இந்த நாட்டில், நான் இரக்கத்தின் யூபிலி ஆண்டின் புனிதக் கதவை முதன் முதலாகத் திறந்தேன். அந்நாட்டு மக்களுக்கும், ஆப்ரிக்கா முழுவதும் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்கும், பலம் மற்றும் நம்பிக்கையை வழங்கும் அடையாளமாக இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டு புனிதக் கதவு திறப்பு நிகழ்வு இருந்தது.  வானகத் தந்தையின் இரக்கம் நிறை அன்பை நோக்கி அகலத் திறக்கும் வாயிலாகவும், நம் அமைதியாகவும் இருக்கும் இயேசுவிடம், ஆப்ரிக்க மக்களை, அவர்களின் அனைத்து ஏக்கங்களோடு, செபத்தில் ஒப்படைப்பதில், என்னோடு இணைய உங்களை வேண்டுகிறேன்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் மத்திய ஆப்ரிக்க குடியரசில் சந்தித்த ஓர் இத்தாலிய அருள்சகோதரி குறித்தும் எடுத்துரைத்தார்.

காங்கோவிலிருந்து வந்திருந்த இந்த 81 வயது இத்தாலிய அருள்சகோதரி, தன் 23 அல்லது 24வது வயதிலிருந்தே ஆப்ரிக்காவில் தங்கி, கருவுற்ற பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் ஒரு செவிலியாக பணியாற்றி, 3,280 குழந்தைகள் பிறக்க உதவியுள்ளார். மற்றவர்களுக்காக தங்கள் வாழ்வையே தியாகம் செய்துள்ள இவரைப் போன்ற எண்ணற்ற துறவிகள் உள்ளனர். இளையோரே, இது குறித்து கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!. இந்த அருள்சகோதரியை நாடி இஸ்லாமியப் பெண்களும் செல்கின்றனர். அவர்களுக்கு நன்றாகவே தெரியும், இந்த அருள்சகோதரி, மதமாற்றம் வேண்டி போதிக்கவில்லை. மாறாக, தன் சேவை மூலம் கிறிஸ்தவ சாட்சியாக உள்ளார் என்பது. மதமாற்றம் அவர் நோக்கமல்ல. முதலில் சாட்சிய வாழ்வு, பின்னர் தான் போதனை எனும் வார்த்தைகள்.

இவ்வாறு புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.