2015-12-02 15:51:00

இரக்கத்தின் யூபிலி குறித்து கர்தினால் தாக்லேயின் பேட்டி


டிச.02,2015. தகுதி ஏதுமற்ற தன் மீது இறைவன் இரக்கம் காட்டுகிறார் என்று உணரும் மனித மனம், அந்த இறைவனை நோக்கித் திரும்ப முடியும் என்பதால், இரக்கமும், மனமாற்றமும் நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ளது என்று, பிலிப்பின்ஸ் நாட்டு கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

மணிலா பேராயரும், அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவருமான கர்தினால் தாக்லே அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், இறைவனின் இரக்கம், நீதி, உண்மை ஆகியவை ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிக்க முடியாதவண்ணம் இணைந்துள்ளன என்று கூறினார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், உரோமையில் உள்ள பசிலிக்காக்களில் மட்டுமல்லாமல், உலகின் பல கோவில்களில் புனிதக் கதவுகளை திறக்கும்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பணித்திருப்பது பொருளுள்ள ஒரு ஆலோசனை என்று சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், காரித்தாஸ் தலைவர் என்ற முறையில், மக்கள் தங்கள் உள்ளக் கதவுகளைத் திறந்து, இரக்கச் செயல்களில் ஈடுபடுமாறு தான் அழைப்பு விடுப்பதாகக் கூறினார்.

திருப்பயணிகள் கோவில்களில் புனிதக் கதவுகள் வழியே நுழைவதால் மட்டுமல்ல, தெருக்களில் தேவையுள்ளோரைச் சந்தித்து பணிபுரிவதன் வழியாகவும், இரக்கத்தின் யூபிலி ஆண்டுக்குரிய கடமைகளை நிறைவேற்ற முடியும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.