2015-12-02 15:43:00

ஆப்ரிக்கப்பயணம் இரக்கத்தின் யூபிலிக்கு முன்னோடி - லொம்பார்தி


டிச.02,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஆப்ரிக்க மக்களும் எவ்விதத் தயக்கமும் இன்றி, ஒருவரை ஒருவர் உள்ளார்ந்த அன்புடன் சந்தித்தது, இத்திருத்தூதுப் பயணத்தின் மிக முக்கிய அம்சம் என்று, திருப்பீடச் செய்தி தொடர்பாளரும், வத்திக்கான் வானொலி இயக்குனருமான இயேசு சபை அருள் பணியாளர் பெதெரிகோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

நவம்பர் மாதம் 30ம் தேதி முடிவுற்ற திருத்தந்தையின் ஆப்ரிக்கத் திருத்தூதுப் பயணம் குறித்து, அருள்பணி லொம்பார்தி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், ஆப்ரிக்கக் கண்டத்தின் பல நாடுகள், காலநிலை மாற்றம், சமுதாய நெருக்கடி, வெளிநாட்டவரின் சுரண்டல் ஆகிய பல துன்பங்களை அனுபவித்தாலும், அங்குள்ள மக்களிடம் நம்பிக்கை மேலோங்கியிருப்பதைக் காணமுடிகிறது என்று கூறினார்.

இரக்கத்தின் யூபிலி துவங்குவதற்கு முன்னதாகவே, பாங்கி பேராலயத்தில் புனிதக் கதவைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்ததுபற்றி கேள்வி எழுந்தபோது, பாங்கி நகரத்தை, "உலகத்தின் ஆன்மீகத் தலைநகரம்" என்று திருத்தந்தை கூறியதை, அருள்பணி லொம்பார்தி அவர்கள், சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.

பாங்கி பேராலயத்தில் புனிதக் கதவைத் திறந்ததன் வழியாக, விளிம்புகளில் இருக்கும் மக்களிடம் திருஅவை வாழ்கிறது என்பதையும், இரக்கத்தின் யூபிலி எவ்விதம் கொண்டாடப்பட வேண்டும் என்பதையும் திருத்தந்தை சொல்லித் தந்துள்ளார் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

புனிதக் கதவு  திறக்கப்பட்டதும், இளையோருக்கு ஒப்புரவு அருள் அடையாளம் வழங்கப்பட்டது, யூபிலி ஆண்டின் மற்றுமொரு முக்கிய பாடத்தைச் சொல்லித் தந்துள்ளது என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் வலியுறுத்தினார்.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டிற்கு திருத்தந்தை பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று பல எச்சரிக்கைகள் எழுந்தும், திருத்தந்தை அந்த நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டது, தேவையில் இருப்போருடன் தன்னை இணைத்துக்கொள்ள அவர் காட்டிய அக்கறையையும், துணிவையும் வெளிப்படுத்தியது என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், இஸ்லாமிய மதத் தலைவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாகனத்தில் அழைத்துச் சென்றது, கிறிஸ்தவ, இஸ்லாமிய பிளவுகளால் துன்புறும் அந்நாட்டிற்கு அழகான ஓர் அடையாளமாக விளங்கியது என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.