2015-12-02 14:54:00

அமைதி ஆர்வலர்கள் : 2001ல் நொபெல் அமைதி விருது


டிச.02,2015. கோஃபி அன்னான் அவர்களும், ஐக்கிய நாடுகள் நிறுவனமும் 2001ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டனர். அச்சமயத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலராகப் பணியில் இருந்தவர் கோஃபி அன்னான்.    அமைதியான ஓர் உலகை மேலும் சிறப்பாக உருவாக்குவதற்கு, கோஃபி அன்னான் அவர்களும், ஐக்கிய நாடுகள் நிறுவனமும் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக இந்த அமைதி விருது வழங்கப்பட்டது. ஐ.நா.வின் ஏழாவது பொதுச் செயலராக 1997ம் ஆண்டு சனவரி முதல் தேதி பணியைத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் பணியில் இருந்த கோஃபி அன்னான் அவர்கள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் ஐ.நா. உறுப்பு நாடுகளால் மீண்டும் அப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ள கோஃபி அன்னான் அவர்கள், 1997ம் ஆண்டு சனவரி முதல் 2006ம் ஆண்டு டிசம்பர் வரை பத்து ஆண்டுகள் ஐ.நா. பொதுச் செயலராகப் பணியாற்றியிருக்கிறார். ஐ.நா. பணியாளர் ஒருவர், ஐ.நா. பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது அதுவே முதன்முறையாகும். இவர், இப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் பல்வேறு மனிதாபிமானத் திட்டங்ளில் ஈடுபட்டு வருகிறார். 2001ம் ஆண்டில், கோஃபி அன்னான் அவர்கள் பெற்ற, Kora அனைத்து ஆப்ரிக்க வாழ்வு முழுவதும் இசை சாதனையாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கின்றார். சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டைக்குத் தீர்வு காண்பதற்காக, சிரியாவுக்கான ஐ.நா. மற்றும் அரபு கூட்டமைப்பின் சிறப்புப் பிரதிநிதியாக, 2012ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பணியாற்றினார். ஆயினும், சிரியாவில் இடம்பெறும் மோதல்களுக்குத் தீர்வு காண்பதில் ஐ.நா. பாதுகாப்பு அவையின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என்று சொல்லி இப்பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.

“போரிலும், அமைதியிலும் வாழ்வு (A Life in War and Peace)” என்ற தலைப்பில் கோஃபி அன்னான் அவர்கள் எழுதியுள்ள ஒரு புத்தகம் பற்றி கருத்து தெரிவித்த பில் கேட்ஸ் அவர்கள், உலக அளவில்  நலவாழ்வை மேம்படுத்துவதிலும், வளர்ச்சியைக் கொண்டு வருவதிலும் இவர் சாதித்தவை, நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் விவகாரங்களில் ஐ.நா.வில் இவர் ஆற்றிய பணிகள்... போன்றவற்றை அறிவதற்கு இப்புத்தகம் உதவுகின்றது என்று கூறியுள்ளார். பத்து ஆண்டுகள் ஐ.நா. பொதுச் செயலராகப் பணியாற்றிய கோஃபி அன்னான் அவர்கள், ஐ.நா.வைச் சீர்திருத்தம் செய்வதற்கும், உலகில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும், உலகில் எய்ட்ஸ் நோய் பரவுவதைத் தடுப்பதற்கும் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக 2001ல் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டதாக பில் கேட்ஸ் அவர்கள் தெரிவித்து பாராட்டியுள்ளார். 192 உறுப்பு நாடுகளைக் கொண்ட தன்னார்வல நிறுவனமான ஐ.நா.வை நடத்திச் செல்வது எவ்வளவு கடினமான வேலை என்பதை இவரது புத்தகத்தை வாசித்த பின்னர் அறிந்து கொண்டேன் என்றும் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

ஆப்ரிக்க நாடாகிய Ghanaவின் Kumasiயில் 1938ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி அரசப் பரம்பரைக் குடும்பத்தில் பிறந்தவர் கோஃபி அன்னான். இவர் பிறந்த Akan மொழி பேசும் இன மரபில் சில குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த வாரத்தின் நாளை வைத்துப் பெயரிடப்படும். அதன்படி இவர் பிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். Kumasiயில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து, 1961ம் ஆண்டில் மெரிக்க ஐக்கிய நாட்டில் Macalester கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். ஜெனீவாவில் பொருளாதாரக் கல்வியில் பட்டயம் பெற்ற இவர், Massachusetts தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாண்மைக் கல்வியில் முதுகலை பட்டம் பெற்றார். 1962ம் ஆண்டில் ஐ.நா.வில் பணியில் சேர்ந்த இவர், முதலில் ஜெனீவாவில் ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனத்திலும், பின்னர் ஐ.நா. புலம்பெயர்ந்தவர் நிறுவனத்திலும் பணியாற்றினார். அதன் பின்னர் நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், மனிதவள நிர்வாகம்(1987-1990), வரவு செலவு மற்றும் நிதித்துறை(1990-1992), அமைதிப் படை கண்காணிப்பு( மார்ச்1992-டிசம்பர்1996)   உட்பட பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தார். உலகில் பல பகுதிகளில் ஏறக்குறைய எழுபதாயிரம் ஐ.நா. அமைதிப் படைகளும், அதன் அலுவலகர்களும் பணியில் இருந்தபோது கோஃபி அன்னான் அவர்கள், இந்த அமைதிப்படைக்கு, ஐ.நா. நேரடிப் பொதுச் செயலராகப் பணியாற்றினார். 

கோஃபி அன்னான் அவர்கள், ஐ.நா.வின் பொதுச் செயலராகப் பணியில் அமர்ந்த பின்னர் பல சிறப்பான பணிகளை ஆற்றினார். 1990ம் ஆண்டில், ஈராக், குவைத்தை ஆக்ரமித்தபோது, ஈராக்கிலிருந்த மேற்கத்திய நாடுகளின் குடிமக்களையும், பல நாடுகளின் அலுவலகர்களையும் மீள்குடியமர்த்தும் பணியை ஆற்றினார். மனிதாபிமான உதவிகளுக்காக எண்ணெய் விற்பனை விவகாரத்தை பாக்தாத் அரசோடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்தார். 1995ம் ஆண்டு நவம்பர் முதல் 1996ம் ஆண்டு மார்ச் வரை, முன்னாள் யூக்கோஸ்லாவியாவிற்கு, ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றினார். ஐ.நா. பொதுச் செயலராக, இவர், தனது பதவியை, பல்வேறு கடினமான அரசியல் சூழல்களுக்குத் தீர்வு காண்பதற்குப் பயன்படுத்தினார். 1998ல், ஈராக், ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானங்களோடு இணங்கிச் செல்ல முயற்சி செய்தது, அதே ஆண்டில் நைஜீரியாவில் குடிமக்கள் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு ஆட்சி மாற்றத்தை ஊக்குவித்தது உட்பட பல சிக்கலான காரியங்களைச் சிறப்பாக நடத்தினார். லிபியாவுக்கும், ஐ.நா.பாதுகாப்பு அவைக்கும் இடையே இருந்த பிரச்சனை முடிவதற்கும், அனைத்துலக உதவி வழியாக கிழக்குத் திமோரில் வன்முறை முடிவுக்கு வருவதற்கும் 1999ம் ஆண்டில் உதவினார். 2000மாம் ஆண்டில் லெபனான் நாட்டிலிருந்து இஸ்ரேல் ஆக்ரமிப்பை அகற்றிக் கொள்வதற்கு வழி அமைத்தார் கோஃபி அன்னான். 

2000மாம் ஆண்டு செப்டம்பரில் மத்திய கிழக்கில் வன்முறை மீண்டும் வெடித்தபோது, ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானங்கள் மற்றும் "அமைதிக்கான நிலம்" என்ற கோட்பாட்டின்கீழ், இஸ்ரேலும் பாலஸ்தீனாவும் தங்களுக்கிடையே நிலவிய முரண்பாடுகளைக் களைவதற்கு ஊக்கப்படுத்தினார் கோஃபி அன்னான். இப்படி உலகில் மனித உரிமைகளை ஊக்குவித்து, உலக அளவில் அமைதியும் பாதுகாப்பும் நிலவவும், சமத்துவம், சகிப்புத்தன்மை, மனித மாண்பு போன்ற உலகளாவிய விழுமியங்களும், சட்ட ஒழுங்குகளும் காக்கப்படவும் ஐ.நா. பொதுச் செயலராக, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் கோஃபி அன்னான். எய்ட்ஸ் மற்றும் நலவாழ்வுக்கென உலக அளவில் நிதி சேமிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்த இவர், ஆங்கிலம், ப்ரெஞ்ச், இன்னும் பல்வேறு ஆப்ரிக்க மொழிகளைச் சரளமாகப் பேசுபவர். ஆப்ரிக்கா, ஆசியா, வட அமெரிக்கா என பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் கவுரவ முனைவர் பட்டங்களையும் பெற்றிருப்பவர். 2001ல் நொபெல் அமைதி விருது தவிர வேறு பல விருதுகளையும் பெற்றிருப்பவர் கோஃபி அன்னான்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.