2015-12-01 15:30:00

ஐ.நா.வின் எய்ட்ஸ் நோய் ஒழிப்பு முயற்சி பலனளிக்கும்


டிச.01,2015. எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 2030ம் ஆண்டு வளரச்சித்திட்ட இலக்கு நிச்சயம் எட்டப்படும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் திருஅவை அதிகாரி ஒருவர்.

டிசம்பர் 01, இச்செவ்வாயன்று உலகில் கடைப்பிடிக்கப்பட்ட எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, ஐ.நா.வின் எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் சிறப்பு ஆலோசகர் அருள்பணி Bob Vitillo அவர்கள் ஐ.நா.வின் எய்ட்ஸ் நோய் ஒழிப்பு முயற்சிகள் பற்றிப் பேசினார். 

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. நிறுவனத்திற்கு, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாடு குறித்த பிரதிநிதி குழுவின் தலைவராகவும் பணியாற்றும் அருள்பணி Vitillo அவர்கள், ஐ.நா.வின் 2030ம் ஆண்டு வளரச்சித்திட்ட இலக்கை உருவாக்கும் பணியில் தான் பங்கு கொண்டிருந்தது பற்றியும் பேசினார்.

இன்று உலகில் 25 நாடுகளில், HIV நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உள்ளது என்றுரைத்த அருள்பணி  Vitillo அவர்கள், இந்நோய் பரவுவது குறித்த விழிப்புணர்வு கல்வி, தொடக்க காலத்திலே பரிசோதனை, ஏற்கனவே இக்கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நலவாழ்வு போன்றவற்றில் ஐ.நா. கவனம் செலுத்தி வருகின்றது என்று கூறினார்.

1984ம் ஆண்டில் எய்ட்ஸ் நோய் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 1988ம் ஆண்டில்  முதல் உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.