2015-12-01 15:08:00

ஏழைகளின் விசுவாசம் திருத்தந்தைக்குப் பாதுகாப்பளித்தது


டிச.01,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் ஏழை மக்கள், பாதுகாப்பு வளையமாக இருந்து திருத்தந்தையைப் பாதுகாத்தனர் என்று நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், கென்யா, உகாண்டா மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடுகளுக்கான 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தையுடன் அந்த ஆறு நாள்களும் உடனிருந்த கர்தினால் Fernando Filoni அவர்கள் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இத்திங்களன்று தொடங்கியுள்ள திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் 19வது நிறையமர்வு மாநாட்டில் பேசிய கர்தினால் Fernando Filoni அவர்கள், ஆப்ரிக்காவில் திருத்தந்தையின் பாதுகாப்புக்கு ஐ.நா. அமைதிப்படை, வத்திக்கான் காவல்துறை, பாதுகாப்புப் படைகள் ஆகியவை இருந்திருந்தாலும், திருத்தந்தையின் வாகனம் சென்றவிடமெல்லாம் மக்கள் தொடர்ந்து கூடவே சென்று அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் அவரைக் காப்பாற்றினர் என்று தெரிவித்தார்.

பாங்கி விமான நிலையத்தில் சென்றிறங்குவதற்கு முன்னர், பாங்கி நகர் புறநகர்ப் பகுதியில் எரிக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட வீடுகளைப் பார்த்தோம். விமானம் தரையிறங்கியதும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் விமான ஓடுதளம் நோக்கி ஓடி வந்தனர், ஏனெனில் புலம்பெயர்ந்த மக்கள் முகாம்கள் விமான நிலையத்தைச் சுற்றியே உள்ளன என்றும் கூறினார் கர்தினால் Filoni.   மத்திய ஆப்ரிக்க குடியரசுக்குச் செல்வது பாதுகாப்பானதல்ல என்று பலர் விடுத்த எச்சரிக்கையையும் தவிர்த்து திருத்தந்தை அங்கு சென்றார், வர்ணிக்க முடியாத வன்முறைகளையும், பல போர்களால் துன்பங்களையும் எதிர்கொண்டுள்ள அந்நாட்டில் புனிதக் கதவைத் திறந்திருப்பது, திருத்தந்தை கூறியது போல, அந்நாடு உலகின் ஆன்மீகத் தலைநகராக மாறியுள்ளது என்றும் கர்தினால் கூறினார்.   

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.