2015-12-01 11:30:00

ஆப்ரிக்க மக்களின் மகிழ்வு, கூட்டம் வியக்க வைத்தன


டிச.01,2015. இறைவன், வியப்புக்களின் கடவுள் என்பதை அறிந்தே இருக்கிறேன், ஆனால், ஆப்ரிக்காவின் இந்த முதல் திருத்தூதுப் பயணத்தில் இவ்வளவு வியப்பு இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கென்யா, உகாண்டா மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடுகளுக்கு ஆறு நாள்கள் கொண்ட திருத்தூதுப் பயணத்தை இத்திங்கள் மதியம் நிறைவு செய்து உரோமைக்குத் திரும்பிய பயணத்தில் தன்னோடு பயணம் மேற்கொண்ட பன்னாட்டுப் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

களைப்பாகவும், அதேநேரம், மிகவும் திருப்தியாகவும் காணப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பத்திரிகையாளர்களுடன் அறுபது நிமிடங்களுக்கு மேல் செலவழித்து, பல்சமய உரையாடல், ஊடகங்களின் பங்கு, ஆப்ரிக்கா பற்றிய பசுமையான நினைவுகள், எய்ட்ஸ் நோய், காலநிலை மாற்றம், தீவிரவாதம் உட்பட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இத்திருத்தூதுப் பயண நிகழ்வுகளில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம், அவர்களிடம் காணப்பட்ட ஆனந்தம், காலியான வயிற்றுக்கு ஏதும் இல்லாதபோதுகூட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு மக்களுக்கு கிடைத்த சக்தி போன்றவை தன்னை மிகவும் ஈர்த்தது என்றும் கூறினார் திருத்தந்தை.

மத்திய ஆப்ரிக்க குடியரசில், பல ஆண்டுகளாக மக்கள் அனைவரும் சகோதர சகோதரிகளாகவே வாழ்ந்து வந்துள்ளனர், ஆனால் தற்போது, இரு ஆண்டுகள் உள்நாட்டுப் போருக்குப் பின்னர் அமைதி, ஒப்புரவு மற்றும் மன்னிப்பை விரும்புகின்றனர், அந்நாட்டின் கத்தோலிக்கர், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையினர் மற்றும் இஸ்லாம் மதத்தினர், நாட்டினர் அனைவரும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒருவர் ஒருவரை மதித்து வாழ்வதற்கு தங்களால் இயன்ற அளவில் சிறப்பாக உதவி வருகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

 ஒவ்வொரு மதத்தின் தலைவர்களும் நல்ல விழுமியங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும், இது மத்திய ஆப்ரிக்க குடியரசில் இடம்பெற்று வருகின்றது என்றும், அமைதிக்கு இக்காலத்தில் மிக முக்கியமாகத் தேவைப்படுவது உடன்பிறப்பு உணர்வு என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய ஆப்ரிக்க குடியரசின் பாங்கி நகரில் மசூதியில் செபித்தேன் என்றும் கூறிய திருத்தந்தை, வரலாற்றின் சில கட்டங்களில் ஓர் அடிப்படைவாதக் குழு அல்லது பல குழுக்கள் இருக்கின்றன என்பதற்காக அந்த மதம் முழுவதையும் புறக்கணிக்க இயலாது என்றும் விமானத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.