2015-11-30 14:55:00

பாங்கி பேராலயத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


நவ.30,2015. பாங்கி பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை:

அன்பு சகோதர சகோதரிகளே, உலக மீட்பரின் வருகையை குறிக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று உங்களுடன் இங்கிருப்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது. அனைத்துலகத் திருஅவை ஆவலாகக் காத்திருக்கும் இரக்கத்தின் யூபிலி ஆண்டினை இன்று நாம் துவங்கியுள்ளோம். இந்தப் பேராலயத்தில் என்னுடன் இணைந்திருக்கும் அருள் பணியாளர்கள், துறவியர், மேய்ப்புப்பணி பணியாளர்கள் வழியே, மத்திய ஆப்ரிக்க குடியரசின் அனைத்து மக்களோடும், குறிப்பாக, நோயுற்றோர், முதியோர், வாழ்வில் காயமடைந்திருப்போர் அனைவரோடும் நான் இணைய விரும்புகிறேன்.

கோவிலுக்கு அருகே இருந்த முடக்குவாத நோயாளிக்கு, பொன்னோ, வெள்ளியோ தராமல், அவருக்கு இறைவனின் பெயரால் நலமளித்த திருத்தூதர்கள் பேதுரு, யோவான் இவர்களைப் போல், நானும், இறைவனின் சக்தியையும், வலிமையையும் வழங்க வந்திருக்கிறேன். இவையே நம்மை எழுந்து நிற்க வைக்கின்றன, மறுகரையான புது வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றன (காண்க. லூக்கா 8:22).

மறுகரைக்குச் செல்ல நம்மைப் பணிக்கும் இயேசு, நம்மைத் தனியே விடுவதில்லை, அவரும் உடன் வருகிறார். நம்மிடம் உள்ள பிளவுகளிலிருந்து விடுதலை பெற்று, மறுகரைக்குச் செல்வது, அவருடன் இருந்தால் மட்டுமே இயலும். "உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்" (மத்தேயு 5:48) என்பதே நமக்குத் தரப்பட்டுள்ள அழைப்பு. நிறைவாய் இருக்க நமக்குத் தரப்பட்டுள்ள இந்த அழைப்பின் ஒரு முக்கிய அம்சம், பகைவரை அன்பு செய்வது. நற்செய்தியை பறைசாற்றுபவர்கள், மன்னிப்பை செயல்படுத்துபவர்களாக, ஒப்புரவை வளர்ப்பவர்களாக, இரக்கத்தில் தலைசிறந்தவர்களாக இருக்கவேண்டும்.

இந்த ஞாயிறு வாசகங்களில் இறைவன் அறிவித்துள்ள மீட்பின் பல அம்சங்களைக் காண்கிறோம். அனைத்திற்கும் முன்னதாக, இறைவன் வாக்களித்துள்ள மகிழ்வு, நீதியின் வழியே வரும் என்று கூறப்பட்டுள்ளது.

நீதியை வழங்கவரும் மீட்பரை வரவழைக்க, திருவருகைக் காலம் ஒரு தகுந்த தருணம். அவர் நம் வாழ்வில் நம்பிக்கையைக் கூட்ட வருகிறார். அந்த நம்பிக்கையைப் பறைசாற்ற நம்மை அனுப்புகிறார், குறிப்பாக, இவ்வுலகின் சக்திகளால் ஒடுக்கப்பட்டுள்ளோர், தங்கள் பாவங்களின் பாரத்தால் வீழ்ந்திருப்போர் ஆகியோருக்கு நம்பிக்கையைப் பறைசாற்ற நம்மை அனுப்புகிறார்.

நாம் காத்திருக்கும் இறைவனின் மீட்பு, அன்பின் நறுமணம் கொண்டது. அனைத்து இடங்களிலும், குறிப்பாக, வன்முறை, வெறுப்பு, அநீதி இவை ஆட்சி செய்யும் இடங்களில், அன்பே கடவுள் என்பதற்கு சாட்சிகளாக இருக்க கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இறுதியாக, இறைவன் அறிவித்துள்ள மீட்பு, எதனாலும் வெல்லமுடியாத சக்தி கொண்டது; அதுவே, இறுதியில் நிலைத்து நிற்கும். இந்த உறுதி கிறிஸ்தவர்களுக்கு, மிகக் கடினமானச் சூழல்களிலும், அமைதியையும், துணிவையும், சக்தியையும் தருகிறது. நரகத்தின் அனைத்து சக்திகளும் கட்டவிழ்த்து விடப்பட்டாலும், கிறிஸ்தவர்கள் தலை நிமிர்ந்து நிற்கவேண்டும், ஏனெனில், இறைவனே அன்பு, அமைதி என்ற இறுதி வார்த்தைகளாக விளங்குபவர்!

ஆயுதங்களைப் பயன்படுத்தும் அனைவருக்கும் நான் விண்ணப்பிக்கிறேன்: மரணத்தின் கருவிகளைக் கைவிடுங்கள்! நேர்மை, அன்பு, இரக்கம் என்ற கருவிகளை ஏந்தி நில்லுங்கள். ஆப்ரிக்காவின் மையத்தில் அமைந்துள்ளதால், மத்திய ஆப்ரிக்கா என்று பெயர் பெற்றுள்ள இந்நாட்டில் வாழும் அருள் பணியாளரே, துறவியரே, இறைவனின் மையமான அன்பை, உங்கள் நாட்டு மக்களுக்கு வழங்குவது, அதை வாழ்வாக்குவது உங்களுக்குத் தரப்பட்டுள்ள தனிப்பட்ட அழைப்பு.

"நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!" (1 தெசலோனிக்கர் 3:13). ஒப்புரவு, மன்னிப்பு, அன்பு, அமைதி! ஆமென்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.