2015-11-29 14:00:00

மத்திய ஆப்ரிக்கக் குடியரசு வரவேற்பில் திருத்தந்தையின் உரை


நவ.29,2015. மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் தலைநகர் பாங்கியில், அரசுத்தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்பின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை:

இடைக்கால அரசுத் தலைவரே, அதிகாரிகளே, சகோதர ஆயர்களே, மாண்புமிக்க பெரியோரே, தாய்மாரே, முன்னாள் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களைத் தொடர்ந்து, இந்நாட்டிற்கு அமைதியின் பயணியாகவும், நம்பிக்கையின் திருத்தூதராகவும்  நான் வந்திருக்கிறேன். மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாடு, தன் வரலாற்றில் புதியப் பிரிவைத் துவக்க, உள்நாட்டு, மற்றும் பன்னாட்டு அதிகாரிகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.

இந்நாட்டை உருவாக்கியவர்களின் கனவையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும், இக்குடியரசின் விருதுவாக்கு, இந்நாட்டிற்கு ஒளி சேர்க்கும். ஒற்றுமை-மாண்பு-உழைப்பு என்ற மூன்று சொற்களால் உருவான இந்த விருதுவாக்கு, இன்றைய மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் வேட்கையை வெளிப்படுத்துகிறது.

முதலில் ஒற்றுமை. மக்களை ஒருங்கிணைக்கும் முக்கிய மதிப்பீடு இது. நம்மிடமிருந்து வேறுபட்டவர்களை அச்சத்துடன் நோக்காமல், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது முக்கியம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஒரு தொடர் சவால். இந்தச் சவாலைச் சந்திக்க, படைப்பாற்றல், தாராள குணம், தன்னலத்தைத் தியாகம் செய்தல், மற்றவரை மதித்தல் ஆகியப் பண்புகள் தேவை.

அடுத்தது, மாண்பு. இந்த நன்னெறி மதிப்பீடு, நேர்மை, விட்டுக்கொடுத்தல், பிரமாணிக்கம் ஆகிய பண்புகளுடன் தொடர்புள்ளது. ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர் என்பதைக் கூறும், “Zo kwe zo” என்ற வார்த்தைகளை மத்திய ஆப்ரிக்கா பயன்படுத்துகிறது. தனிப்பட்ட மனிதர்களின் மாண்பைப் பாதுகாக்க, நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். வசதி, வாய்ப்பு உள்ளவர்கள், தங்கள் உரிமைகளை பெருக்குவதில் கவனம் செலுத்தாமல், வாய்ப்பற்றவர்கள் முன்னேற்றம் அடைவதற்கு உதவிகள் செய்யவேண்டும்.

இறுதியாக, உழைப்பு. உழைப்பு ஒன்றே நம் குடும்பங்களை முன்னேற்றும். உழைப்பின் வழியே, பெற்றோர் தங்கள் அன்பை குழந்தைகளுக்கு வெளிப்படுத்துகின்றனர். மத்திய ஆப்ரிக்கா, இயற்கை வளங்கள் மிகுந்த ஒரு நாடு. மக்களின் நலனை முன்னிறுத்தி, இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் முடிவுகள் எடுக்கப்படவேண்டும். "எறும்புகள் மிகச் சிறியவை, ஆனால், அவை மிக அதிக அளவில் இணைவதால், தங்கள் உணவை இல்லங்களுக்கு கொணர முடிகிறது" என்று உங்கள் முன்னோர் பயன்படுத்திய பழமொழி, ஒற்றுமையாய் உழைப்பதன் பயனை உணர்த்துகிறது.

இந்நாட்டின் தலத்திருஅவையும், அரசியல் தலைவர்களும் இந்த மூன்று மதிப்பீடுகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். தற்போதைய, மற்றும் எதிர்காலத் தலைவர்கள், ஒற்றுமை-மாண்பு-உழைப்பு என்ற இந்த மூன்று மதிப்பீடுகளில் இந்நாட்டை வழிநடத்திச் செல்வர் என்று நம்புகிறேன்.

ஒப்புரவு, ஆயதங்களைக் களைதல், அமைதியைக் கட்டியெழுப்புதல், நலவாழ்வு பராமரிப்பு ஆகிய முயற்சிகளை இந்நாட்டு அதிகாரிகளும், மக்களும் மேற்கொள்வர் என்று ஆழ்மனதில் நம்புகிறேன்.

ஆப்ரிக்கக் கண்டத்தின் இதயமாக வீற்றிருக்கும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, இறைவனின் கொடைகளால் நிறைந்துள்ளதைக் காண்கிறேன்! இந்நாட்டின் தலைவர்களும், மக்களும், இக்கொடைகளை போற்றி பாதுகாக்கவும், ஒன்றிப்பு, மனித மாண்பு, நீதி, அமைதி ஆகிய மதிப்பீடுகளை வளர்க்க அயராது உழைக்கவும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.