2015-11-29 15:03:00

புனித சவேரியார் பங்கு புலம்பெயர்ந்தோர் முகாமில் திருத்தந்தை


நவ.29,2015. பாங்கி நகர் புனித சவேரியார் பங்கின் புலம்பெயர்ந்தோர் முகாமின் சிறாரும், பெண்களும் திருத்தந்தைக்கு குலவை குரல் எழுப்பி அமோக வரவேற்பளித்தனர். ஒரு பெண் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவ்விடத்தில் குனிந்து குனிந்து பலரைத் தொட்டு ஆசிர்வதித்த திருத்தந்தை, ஒலிவாங்கியைக் கேட்டுப் பெற்றுப் பேசினார். ஏனெனில் திருத்தந்தை இங்கு உரையாற்றுவதாக பயணத் திட்டத்தில் இல்லை. அம்மக்களிடம் பேசிய திருத்தந்தை, அமைதி, மாண்பு, அன்பு என்ற தலைப்பில் சிறார் எழுதிய செய்திகளை வாசித்தேன் என்று உங்களிடம் சொல்கிறேன். நாம் எல்லாரும் அமைதிக்காகச் செபிக்க வேண்டும், அமைதிக்காகப் பணியாற்ற வேண்டும், ஆனால், அன்பும், நட்புறவும், சகிப்புத்தன்மையும் மன்னிப்பும் இல்லாமல் அமைதி ஏற்படாது. நாம் அமைதிக்காக ஏதாவது செய்ய வேண்டும். மத்திய ஆப்ரிக்க குடியரசு மக்கள் அனைவர் மத்தியிலும் பெரிய அளவில் அமைதி நிலவ வேண்டுமென வாழ்த்துகிறேன். இனம், கலாச்சாரம், மதம், சமூகம் என, நீங்கள் எதைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அமைதியில் நீங்கள் வாழ இயலும்.  நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, நாங்கள் எல்லாரும் உடன் பிறந்தவர்கள் என்று சொல்ல வேண்டுமென்று விரும்புகிறேன் என்று கூறினார். உடனே, அவர்களும் ஒருசேர, நாங்கள் எல்லாரும் உடன் பிறந்தவர்கள் என்று திரும்பத் திரும்பக் கூறினர். இறுதியில் எனக்காகச் செபியுங்கள், எனக்காகச் செபிக்க மறக்காதீர்கள் என்றும் கூறி அவர்கள் அனைவருக்கும் தனது ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  இம்மக்களிடம் பேசிய பின்னர், அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீட தூதரகத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை. அங்கு மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆயர்களைச் சந்தித்து அவர்களுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். பாங்கி பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயம் செல்தல், பாங்கி பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி புனிதக் கதவை திறத்தல், சில இளையோருக்கு ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுதல் ஆகியவை இஞ்ஞாயிறு மாலை நிகழ்வுகளாகும்.

48 இலட்சம் மக்களைக் கொண்ட மத்திய ஆப்ரிக்க குடியரசில் 50 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், 15 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் மற்றும் 35 விழுக்காட்டினர் பூர்வீக மதங்களைப் பின்பற்றுகிறவர்கள். வைரக் கனிமங்கள் நிறைந்த இந்நாட்டில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவப் புரட்சிக் குழுக்களுக்கிடையே தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. அதனால் அமைதி காக்கும் பணியில் 2014ம் ஆண்டில் பத்தாயிரம் ஐ.நா. படைகள் அமர்த்தப்பட்டுள்ளன. திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணப் பாதுகாப்பிற்கு, அந்நாட்டுக் காவல்துறையினர் மற்றும் வத்திக்கான் காவல்துறையினர் என 500 பேரும், மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஐ.நா. அமைதிப் படைகளும் பணியில் உள்ளனர். பிரான்சும், தனது முன்னாள் காலனியாகிய இந்நாட்டில் அதிகப் படைகளைப் பாதுகாப்பிற்கென அமர்த்தியுள்ளது. திருத்தந்தை, அமைதியின் தூதுவராக, தனது நாட்டிற்கு வருகிறார் என்று, மத்திய ஆப்ரிக்க குடியரசின் இடைக்கால அரசுத்தலைவரும் கூறியுள்ளார். நிலையான ஓர் அரசு இல்லாத இந்நாடு, அடுத்த மாதத்தில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. இந்நாட்டில் திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் அமைதி மற்றும் ஒப்புரவைக் கொண்டு வரும் என்று நம்புவோம், அதற்காகச் செபிப்போம்.    

இத்திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து இத்திங்கள் மாலை 6.45 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.