2015-11-29 14:52:00

கம்ப்பாலா இயேசுவின் திரு இதய பேராலயத்தில் திருத்தந்தை


நவ.29,2015. கம்ப்பாலா இயேசுவின் திரு இதய பேராலயத்தில் உகாண்டா நாட்டின் அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்கள் சந்திப்பு இச்சனிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம் பெற்றது. முதலில் ஓர் அருள்பணியாளர், ஓர் அருள்சகோதரி, ஒரு குருத்துவ மாணவர் ஆகிய மூவரும் சாட்சியங்களை வழங்கினர். இவர்களின் பகிர்வுகளைக் கேட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது தாய்மொழியான இஸ்பானியத்தில், நினைவு, பிரமாணிக்கம், செபம் ஆகிய முக்கிய தலைப்புகளில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். இவர்களுக்கென ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை அச்சந்திப்பின்போது வழங்கவில்லை. 1969ல் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல், 1993ல் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் ஆகிய இருவரும் கம்ப்பாலா இயேசுவின் திருஇதயப் பேராலயத்தில் செபித்து உரையாற்றியுள்ளனர். இப்பேராலயம் அமைந்திருக்கும் நிலப்பகுதியை, White fathers  எனப்படும் ப்ரெஞ்ச் மறைப்பணியாளர்க்கு, அரசர் 2ம் Mwanga அவர்கள் 1889ம் ஆண்டில் நன்கொடையாக வழங்கினார். இப்பேராலய கட்டுமானப் பணி 1914ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1925ம் ஆண்டில் திருப்பொழிவு செய்யப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை இரவில் இப்பேராலயத்தில் உரையாற்றியபோது, ஓர் அருள்பணியாளரோ, ஒரு துறவியோ தனக்கு அதிகம் வேலை இருக்கின்றது என்று செபத்தைக் கைவிட்டால், அவர் தனது துறவு வாழ்வுக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதை இழக்கிறார் என்பதை நினைவுபடுத்தி, அனைவரோடும் சேர்ந்து செபித்தார். இத்துடன் இந்நாளின் நிகழ்வுகள் நிறைவடைந்தன. பின்னர், அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற கம்ப்பாலா திருப்பீட தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.