2015-11-29 13:46:00

அருள்பணியாளர், துறவியருடன் திருத்தந்தை மனம்விட்டுப் பேசியது


நவ.29,2015. கம்பாலா புனித மரியன்னைப் பேராலயத்தில் அருள்பணியாளர், துறவியர், மற்றும் அருள்பணி பயிற்சி பெறுவோருடன் திருத்தந்தை மனம்விட்டுப் பேசிய உரை:

அன்பு நண்பர்களே, உங்களிடம் மூன்று கருத்துக்களைக் கூற விழைகிறேன். மோசே தன் மக்களுக்குக் கூறியதைப் போல, நானும் சொல்கிறேன்: இறைவன் செய்தவற்றை மறந்துவிட வேண்டாம். நினைவில் கொள்ளுதல் என்ற அருளுக்காக இறைவனிடம் மன்றாடுங்கள் என்பதே நான் உங்களுக்குச் சொல்ல விழையும் முதல் கருத்து. கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் மறைசாட்சிகளின் இரத்தத்தால் விதைக்கப்பட்டு வளர்ந்துள்ளது, உகாண்டா தலத்திருஅவை. இதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. மறைசாட்சிகள் என்றால், சாட்சிய வாழ்வு வாழ்ந்தவர்கள் என்பதை நினைவில் கொண்டு, நீங்களும் சாட்சிய வாழ்வை மேற்கொள்ளவேண்டும்.

சாட்சிய வாழ்வு வாழ்வதற்கு, பிரமாணிக்கம் மிகவும் முக்கியம். இது, என் இரண்டாவது கருத்து. பிரமாணிக்கமாக இருப்பது என்றால், நமது அழைத்தலில் விடாமுயற்சிகளை கொண்டிருப்பது. சலிப்படையாமல், மக்களுக்குப் பணிபுரிவது. வறியோர், நோயுற்றோர் நடுவில் இடைவிடாமல் உழைத்துவரும், கருணை இல்ல அருள் சகோதரிகள், பிரமாணிக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். அவர்களுக்கு என் நன்றி.

"ஆப்ரிக்காவின் முத்து" என்று அழைக்கப்படும் உகாண்டாவை, ஓர் அருங்காட்சியகப் பொருளாகப் பூட்டிவைத்தால், அந்த மதிப்பு குறைந்துவிடும். மாறாக, அந்த முத்தை இன்னும் மதிப்புள்ளதாக மாற்ற, அருள் பணியாளர்கள், துறவியர் அனைவரின் தொடர்ந்த, இடைவிடாத முயற்சிகள் தேவை.

நினைவாற்றல், பிரமாணிக்கம் இரண்டும் செபத்துடன் இணையவேண்டும். இது என் மூன்றாவது கருத்து. பணிகளின் சுமையால் ஓர் அருள் பணியாளரோ, துறவியோ, செபிப்பதற்கு நேரம் இல்லை என்று சொல்லும்போது, வரலாற்றை மறப்பதற்கும், பிரமாணிக்கம் தவறுவதற்கும் வாய்ப்பாகிவிடும்.

உகாண்டா நாடு, 'ஆப்ரிக்காவின் முத்து' என்று அழைக்கப்படுவது, வெறும் அகராதி வார்த்தையாக இல்லாமல், உண்மையான முத்தாகத் திகழ, நினைவாற்றல், பிரமாணிக்கம், செபம் என்ற மூன்று தூண்களின் மீது அது கட்டப்படவேண்டும். உகாண்டா மறைசாட்சிகள் வழங்கிய சக்தியைக் கொண்டு, இத்திருஅவை முன்னேறிச் செல்ல வேண்டும்.

எனக்காக செபிக்க மறவாதீர்கள். நாம் அனைவரும் இப்போது இணைந்து செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.