2015-11-28 14:00:00

நைரோபி சேரி மக்கள் நாங்கள் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்


நவ.28,2015. கென்ய மக்களின் அன்பு மழையிலிருந்து பிரியாவிடை பெறுவதற்கு, சற்று அதிக நேரம் எடுத்ததால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்பார்க்கப்பட்ட நேரத்திற்குச் சற்று தாமதமாகவே உகாண்டா மண்ணில் கால் பதித்தார். இத்திருத்தூதுப் பயணம் பற்றி வத்திக்கான் வானொலி நிருபர்களிடம் பேசிய கென்ய மக்கள், திருத்தந்தையின் வார்த்தைகளும், அவரின் செயல்களும் எங்கள் மனதை அதிகம் தொட்டுள்ளன, அவர் மேடையிலிருந்து பேசவில்லை, ஆனால், அவர் எங்களோடு ஒருவராக, நாங்கள் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொண்டு எங்கள் உணர்வுகளை மதித்து பதில் அளித்தார். எங்கள் ஒவ்வொருவரின் வாழ்வு மீது அக்கறை காட்டி, எங்களின் வாழ்வுக் கதைகளைக் கேட்டறிந்தார் என்று சொல்லியுள்ளனர். மேலும், நாங்கள் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம், நாங்கள் திருத்தந்தையைப் பார்க்கக்கூடச் செல்லவில்லை, ஆனால் அவர் எங்களைத் தேடி வந்தார் என்று நைரோபியின் காங்கேமி சேரி மக்கள் சொல்லி மகிழ்கின்றனர். ஆப்ரிக்கப் பெண்கள், இளையோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கையில் பல்வேறு மதத்தவருக்கிடையே ஒற்றுமை போன்றவற்றை கென்யாவில் வலியுறுத்தி உகாண்டா மக்களின் பாச மழையில் நனைந்து வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.