2015-11-28 13:31:00

திருத்தந்தை, தென் சூடான் அரசுத்தலைவர் Kiir சந்திப்பு


நவ.28,2015. இவ்வெள்ளி மாலையில் கம்ப்பாலா அரசு இல்லத்தில் தென் சூடான் அரசுத்தலைவர் Salva Kiir அவர்களைத் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பு பற்றித் தெரிவித்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், உகாண்டா அரசுத்தலைவர் Yoweri Museveni அவர்கள் இதனை ஏற்பாடு செய்தார் என்றும், இந்த 15 நிமிடச் சந்திப்பில் தென் சூடானில் அமைதி மற்றும் ஒப்புரவு ஏற்பட திருத்தந்தை வலியுறுத்தினார் என்றும்  தெரிவித்தார். தென் சூடான் அரசுத்தலைவர் Kiir அவர்கள் கத்தோலிக்கர். இவர், தென் சூடான் தலைநகரான ஜூபா பேராலயத்தில் தவறாமல் திருப்பலியில் கலந்துகொள்பவர் மற்றும் அவ்வப்போது இவர் விசுவாசிகளுக்கு உரையாற்றியும் வருகிறார். 2011ல் புதிய நாடாக உருவாகிய தென் சூடானில், 2013ம் ஆண்டு டிசம்பரிலிருந்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. அரசுத்தலைவர் Kiir, அவர் பதவி நீக்கம் செய்த உதவி அரசுத்தலைவர் Riek Machar ஆகிய இருவரின் ஆதரவாளர்க்களுக்கிடையே மோதல்கள் தொடர்கின்றன. தொடர் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்தங்களை எதுவும் இம்மோதல்களை  நிறுத்துவதாகத் தெரியவில்லை. இச்சண்டையில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.