2015-11-28 13:54:00

உகாண்டாவில் திருத்தந்தைக்கு வரவேற்பு


நவ.28,2015. கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய மூன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு ஆறு நாள்கள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கென்யத் தலைநகர் நைரோபியில் இரு நாள்கள் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து இவ்வெள்ளி பிற்பகலில் உகாண்டா நாட்டுக்குப் புறப்பட்டார். அப்பயணத்தில், கென்ய மக்களின் தாராள வரவேற்புக்கு நன்றி சொல்லி, அந்நாட்டு மக்களுடன் செபத்தில் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாகவும், அமைதி, வல்லமை, நல்வாழ்வு ஆகியவற்றை அந்நாடு பெறுவதற்காக இறைவனிடம் செபிப்பதாகவும் கென்ய அரசுத்தலைவர் Uhuru Kenyatta அவர்களுக்குத் தந்திச் செய்தியையும் அனுப்பினார் திருத்தந்தை. மேலும், உகாண்டா அரசுத்தலைவர் Yoweri Museveni அவர்களுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், இந்நாட்டுக்குத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கும் இவ்வேளையில் இப்பயணத்தை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டு, அந்நாட்டினர் அனைவர்மீதும் இறையாசீர் நிரம்ப செபிப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை. மேலும், இந்த உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது புலம்பெயரும் மக்களைக் கண்டு வருகிறது. இம்மக்களை வரவேற்கும் உகாண்டா மக்களின் மனத்தாராளத்துக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்ற டுவிட்டர் செய்தியையும் இவ்வெள்ளியன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உகாண்டா நாட்டின் Entebbe பன்னாட்டு விமான நிலையத்தில், A330 ஆல் இத்தாலியா விமானத்திலிருந்து இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 5 மணி 5 நிமிடங்களுக்கு சென்றிறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அந்நாட்டு அரசுத்தலைவர் Yoweri Museveni, அவரின் துணைவியார் ஜெனட், அரசியல் மற்றும் சமயங்களின் பிரதிநிதிகள் என பலர் கூடியிருந்து வரவேற்றனர். வெண்மை நிறத்தில் ஆடையணிந்திருந்த மூன்று சிறார் திருத்தந்தைக்கு மலர்க்கொத்தைக் கொடுத்தனர். விமான நிலையத்தின் ஒரு பக்கத்தில் சிறார் ஆப்ரிக்க மரபு நடனங்களைப் பாடி ஆடிக்கொண்டிருந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த எளிய, சிறிய மேடையில் திருத்தந்தையும், அரசுத்தலைவரும் நிற்க, தேசியப் பண்கள், 21 துப்பாக்கிகள் முழக்கம் என விமான நிலையத்தில் சிவப்பு கம்பள அரசு வரவேற்பு நடைபெற்றது. அந்த வரவேற்பின்போது பக்திப் பாடல்களும், இன்னிசையும் கேட்டுக்கொண்டே இருந்தன. இதற்குப் பின்னர் அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அரசு அலுவலகத்திற்குச் சென்றார் திருத்தந்தை. சொமாலியா நாட்டில் மையத்தை அமைத்து உகாண்டா நாட்டில் போரிட்டு வரும் al-Shebaab al-Mujahideen தீவிரவாதக் குழுவின் தாக்குதல்களுக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான படைவீரர்களும், காவல்துறையினரும், திருத்தந்தையின் கார் சென்ற சாலையில் பாதுகாப்புக்கு, பணியில் இருந்தனர். திருத்தந்தை சென்ற சாலைகள் எங்கும் மக்கள் வெள்ளம் அணிவகுத்து நின்று ஆரவாரம் செய்தனர். சாலைகளில் விளக்குத் தூண்கள் அனைத்தும், கறுப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்களைக் கொண்ட உகாண்டா நாட்டின் கொடிகளால் அழகுபடுத்தப்பட்டிருந்தன.

Entebbe அரசு இல்லத்தில் அரசுத்தலைவர் Yoweri Kaguta Museveni அவர்களை முதலில் தனியே சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்னர் அரசுத்தலைவரின் குடும்பத்தினரையும் சந்தித்தார். அங்கிருந்த தங்கப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். பரிசுப் பொருள்கள் பரிமாறப்பட்டன. Alessandro Specchi என்ற கலைஞர், தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் போன்ற வடிவத்தை 1705ம் ஆண்டில் செதுக்கிய படத்தை திருத்தந்தை, அரசுத்தலைவருக்குப் பரிசாகக் கொடுத்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் அந்த இல்லத்தில், உயர்மட்ட அரசு, சமய மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் அரசுத்தலைவர் Museveni அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உகாண்டா நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார். ஆப்ரிக்காவின் வளங்கள் நீதியுடன் பகிரப்படவும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், ஒளிவுமறைவற்ற நிர்வாகம் போன்றவற்றுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. இவ்வுரையை முடித்து அச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களை கைகுலுக்கி வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். உகாண்டா நாட்டின் அரசு அலுவலகங்கள் அமைந்திருக்கும் Entebbe நகர், தலைநகர் Kampalaவுக்கு தென் மேற்கே ஏறக்குறைய 37 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. விக்டோரியா ஏரியின் தீபகற்பத்தில் அமைந்திருக்கும் இந்நகர் உகாண்டாவின் பெரிய வர்த்தக நகரமாகும். இங்கு இராணுவ விமான நிலையமும் உள்ளது. ஒரு காலத்தில் பாலஸ்தீனிய ஆதரவு புரட்சிக் குழுக்கள் கடத்தி வைத்திருந்த நூறு பிணையல் கைதிகள் Entebbe விமான நிலையத்தில்தான் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. Entebbe நகரிலிருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள Munyonyo வுக்குக் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.