2015-11-28 13:48:00

Namugongo வில் வேதியர், ஆசிரியர்கள் சந்திப்பு


நவ.28,2015. Munyonyo நகரில்தான் உகாண்டா நாட்டின் வேதியர்களின் பாதுகாவலராகிய புனித Andrew Kaggwa உட்பட நான்கு பேர் 1886ம் ஆண்டில் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர். Munyonyo நகர் திருத்தலத்தில் இவ்வெள்ளி மாலையில் வேதியர்களும் ஆசிரியர்களும் திருத்தந்தையின் வருகையை எதிர்நோக்கி, மெழுகுதிரிகளை ஏந்திக்கொண்டு, திருத்தந்தை திருத்தந்தை என்று சொல்லிக்கொண்டிருந்தனர். ஒரு மின்சக்தி நிலையமே அங்கு காணப்பட்டதாக வத்திக்கான் வானொலி நிருபர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்திருத்தலம் சென்ற திருத்தந்தையை ஒரு வேதியர் வரவேற்றுப் பேசினார். திருப்பீட நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் வழியாக தங்களுக்கு நிதியுதவி செய்யும் திருத்தந்தைக்கு அந்த வேதியர் நன்றியும் சொன்னார். பின்னர் திருத்தந்தையும், இவர்கள் தங்களின் விசுவாசத்தை எடுத்துக்காட்டான வாழ்வால் சாட்சி பகருமாறு கேட்டுக்கொண்டார்.

Munyonyo திருத்தலத்திற்கு அருகில், உகாண்டா மறைசாட்சிகளின் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பண்பை நினைவுகூரும் விதமாக, அந்நாட்டு கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, ஒரு மரக்கன்றை நட்டுத் தண்ணீர் ஊற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், இம்மாறைசாட்சிகள் கொல்லப்பட்ட இடத்தில் வைப்பதற்கென புனித Andrew Kaggwa திருவுருவத்தை ஆசிர்வதித்தார். Munyonyoவில் புதிய ஆலயம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் அடிக்கல்லையும் ஆசிர்வதித்தார். பின்னர் ஒரு வேதியர் தம்பதியர் அனைவர் பெயரால் திருத்தந்தைக்குப் பரிசளித்தனர். இந்நிகழ்வை நிறைவு செய்து, அங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற உகாண்டா தலைநகர் கம்ப்பாலா சென்று திருப்பீட தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். Munyonyoவுக்குச் செல்லும் சாலைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் என்ற பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. இதற்கு உகாண்டா அதிகாரிகளும் நல்மனத்துடன் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வுடன் இவ்வெள்ளி தின பயணத் திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.