2015-11-27 16:54:00

நைரோபியின் ஐ.நா. அலுவலகங்களைப் பார்வையிட்டார் திருத்தந்தை


நவ.27,2015. நைரோபி நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு இவ்வியாழன்(நவ.26) உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்குச்  சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 1996ம் ஆண்டில் ஐ.நா. பொது அவையின் தீர்மானத்தின்பேரில், ஆப்ரிக்காவுக்கு ஐ.நா.வின் தலைமையிடமாக இவ்விடம் அமைக்கப்பட்டது. இங்கு முதலில் அவ்வளாகத் தோட்டத்தில் மரக்கன்று நட்டார் திருத்தந்தை. இது பல கலாச்சாரங்களின் அடையாளச் செயலாக உள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்று திருத்தந்தை விடுத்துவரும் அழைப்புக்கு இந்நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது. பின்னர் அந்நிறுவன அரங்கம் சென்ற திருத்தந்தைக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. முதலில், ஆப்ரிக்காவுக்கான ஐ.நா. பொதுச் செயலர் Sahle Work Zewde அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின்னர் உரையாற்றிய திருத்தந்தை, பொது நலனுக்காகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறும், மனித வளர்ச்சிக்காக உழைக்குமாறும் ஐ.நா. உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பில், அந்த ஐ.நா. நிறுவனத்திற்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தின் மையத்திலுள்ள ஸ்தூபியின் வரைபடத்தையும் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் அவர்களால் 1586ம் ஆண்டில் இந்த ஸ்தூபி வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. கப்பியால் வேலைசெய்யும் 38 இயந்திரங்கள், 900 ஆண்கள் மற்றும் 75 குதிரைகளைக் கொண்டு, இப்பணி நடைபெற்றது. Caligula பேரரசர் காலத்தில் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த ஸ்தூபி, உரோம் Caligula மற்றும் Nero கேளிக்கை வட்டரங்கிலிருந்தது. அந்த இடத்தில்தான் தூய பேதுரு மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார். நைரோபி ஐ.நா. அலுவலகத்தைப் பார்வையிட்ட பின்னர் திருப்பீட தூதரகம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இவ்வியாழன் தின நிகழ்வுகள் நிறைவடைந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.