2015-11-27 16:25:00

நைரோபி இளையோருடன் திருத்தந்தை மனம்விட்டுப் பேசிய உரை


நவ.27,2015. அன்பு நண்பர்களே, Lynette, Manuel இருவரும் எழுப்பிய கேள்விகளை நான் மீண்டும் எனக்குள் எழுப்புகிறேன். பிரிவுகள், போர்கள், மரணங்கள் ஏன் நிகழ்கின்றன? இளையோர் மத்தியில் பிரிவுகள் ஏன்? அழிக்க நினைக்கும் ஆவல் ஏன் நமக்குள் உருவாகிறது? விவிலியத்தின் முதல் பக்கங்களிலேயே அழிக்கும் உணர்வை நாம் காண்கிறோம். இறைவன் அனைத்தையும் நல்லதாக உருவாக்கிய உடனே, சகோதரன், தன் சகோதரனைக் கொல்கிறார்.

தீய சக்தி நம்மை அழிவுக்கு இட்டுச் செல்கிறது. குறுகிய கண்ணோட்டம் கொண்ட பழங்குடியினர் பற்று, ஊழல், போதைப்பொருள் ஆகியவற்றிற்கு தீய சக்தி நம்மை அழைத்துச் செல்கிறது. செபிப்பதற்கு மறக்கும்போது, நாம் அழிவை நோக்கிச் செல்கிறோம்.

வாழ்க்கை கடினமானது. இளையோரே, நாம் வாழ்வது, விண்ணகத்தில் அல்ல; துயரங்கள் நிறைந்த மண்ணகத்தில் வாழ்கிறோம். நாம் சந்திக்கும் துயரங்களை, அழிவுக்குச் செல்லும் பாதையாகப் பார்க்கிறோமா? அல்லது, வளர்வதற்குரிய வாய்ப்பாகப் பார்க்கிறோமா? எதை நாம் தெரிவு செய்கிறோம்? தெரிவு செய்வது, இளையோருக்கு வழங்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த கொடை.

குறுகிய கண்ணோட்டம் கொண்ட பழங்குடியினர் பற்று என்ற சவாலைப் பற்றி Lynette கூறினார். இந்த மனநிலையை வெல்வதற்கு, செவி, கரம், இதயம் என்ற மூன்றையும் பயன்படுத்தவேண்டும். நமது கலாச்சாரம், அயலவர், உறவினர் கலாச்சாரம் ஆகியவற்றில் கூறப்படும் கருத்துக்களைச் செவிகொடுத்து கேட்கவேண்டும். நாம் கேட்பது இதயத்திற்குள் செல்கிறது; அதன்பின் நம் கரம் நீள்கிறது. மற்றவர்களுடன் உரையாடலை மேற்கொள்ளும்போது. கவனமுடன் செவிமடுக்க வேண்டும். தகுந்த முறையில் செவிமடுக்காதபோது, பிரிவுகள் உருவாகின்றன.

நாம் இப்போது கரம் கோர்த்து செபிப்போம்.தவறான வழிகளில் வளர்ந்துள்ள குறுகிய பழங்குடியினர் பற்றுக்கு எதிரான ஓர் அடையாளமாக, நாம் அனைவரும் சரிசமமாக நின்று, கரம் கோர்த்து செபிப்போம். நாம் அனைவருமே ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நம் இதயங்கள் உணரட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.