2015-11-27 16:53:00

கென்யத் தினத்தாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.27,2015. கென்யாவில் பிரசுரமாகும் முக்கிய தினத்தாள்களும், இணையதள பக்கங்களும் திருத்தந்தையின் இப்பயண நிகழ்வுகளை மிக அழகாக, அர்த்தமுள்ள வகையில் வெளியிட்டு வருகின்றன. திருத்தந்தை அன்பையும், ஆசிரையும் கொண்டு வந்துள்ளார், கென்யாவுக்காகச் செபிக்கிறார், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே அமைதியைக் கொண்டு வந்துள்ளார், வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வருகிறார், ஓரினச்சேர்க்கை, கருத்தடை சாதனங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார், கென்ய மக்கள் யூபிலிக் கொண்டாட்ட உணர்வில் திருத்தந்தையை வரவேற்கின்றனர்.. திருத்தந்தை பயணம் மேற்கொள்ளும் சிறிய “Honda” வாகனம் அவரது எளிமையைக் காட்டுகின்றது, நைரோபியில் திருத்தந்தைக்கு வத்திக்கான் சுவிஸ் மெய்க்காப்பாளர்களின் பாதுகாப்பு, ஆப்ரிக்காவில் அதிகமான கத்தோலிக்கரைக் கொண்ட காங்கே சனநாயக குடியரசு, நைஜீரியா, டான்சானியா, உகாண்டா, அங்கோலா ஆகிய ஐந்து நாடுகள் பற்றிய விபரங்கள்... இவ்வாறு “Daily Nation”, “The Standard” “Business Daily” போன்ற தினத்தாள்கள் மிக அழகாக வண்ணப்படங்களுடன் திருத்தந்தையின் இப்பயணம் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன. Business Daily தினத்தாள், “இறைவனின் வேலை” என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரையையே வெளியிட்டுள்ளது. திருத்தந்தையின் கென்யத் திருத்தூதுப் பயணம் அந்நாட்டு மக்களில் எவ்வித நல்தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும். மேலும், இந்நாள்களில் நைரோபித் தெருக்களில் மக்கள் நடந்து செல்லும்போதே ஆடிக்கொண்டே செல்வது, ஆப்ரிக்க மக்கள் வாழ்விலே ஆடலும் பாடலும் ஒன்றரக் கலந்தவை என்பதை மிக அதிகமாகவே உணர்த்துகின்றது. மொத்தத்தில், கென்யத் திருத்தூதப் பயணம் மிகச் சிறப்பாக நடைபெற்றதென, திருத்தந்தையோடு பயணம் மேற்கொள்ளும் திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.