2015-11-27 16:16:00

கங்கேமி சேரியில் வறியோருடன் திருத்தந்தை


நவ.27,2015. அன்பு சகோதர, சகோதரிகளே, உங்கள் நடுவில் இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. என் வாழ்விலும், நான் எடுக்கும் முடிவுகளிலும் நீங்கள் ஒரு தனியிடம் பெற்றுள்ளீர்கள் என்று சொல்வதற்கு எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை.

வறியோர் வாழும் பகுதிகளில் விளங்கும் ஞானத்தைப் பற்றி முதலில் பேச விழைகிறேன். அதிகமான மக்களைக் கொண்டுள்ள இப்பகுதியில், மக்கள் நெருக்கத்தால் எவ்வளவுதான் சங்கடங்கள் இருந்தாலும், அதனை ஒரு குடும்ப உணர்வாக மாற்றும் அறிவாற்றல் உங்கள் மத்தியில் உள்ளது.

தன்னலத்தின் விளைவாக பிறரை ஒதுக்கி வாழும் உலகிற்கு, நீங்கள் உருவாக்கும் இந்த குடும்ப உணர்வு பாடங்களைச்  சொல்லித் தருகிறது. ஏழ்மை நிலையில் வாழும் சமூகங்கள் மத்தியில் காணப்படும் கலாச்சாரம், இக்காலத்தில் நாம் வாழும் சமூகத்திற்கு மிக நேர்மறையான கூறுகளை வழங்குகின்றது. ஒருமைப்பாட்டுணர்வு, பிறருக்காக தன்னையே வழங்குதல், பசித்திருப்பவரோடு பகிர்ந்து வாழ்தல், இறந்த ஒருவரை கிறிஸ்தவ அடக்கம் செய்ய உதவுதல், ஒருவரின் வீட்டில் நோயாளிக்கு இடமளிப்பது, போன்ற விழுமியங்களில் உங்கள் கலாச்சாரம் வெளிப்படுகின்றது.

பணம் என்ற பொய் கடவுளை விட, மனிதர்கள் முக்கியம் என்ற உன்னத உண்மையை, உங்கள் குடும்ப உணர்வு வெளிப்படுத்துகிறது. அரசியல், பொருளாதார உலகங்களில் இந்த உண்மை பேசப்படவில்லையெனினும், இதை நான் மனதாரப் பாராட்டுகிறேன். ஒரு சிலரின் சுயநலத்தால், பெரும்பான்மையான மக்கள் ஒதுக்கப்பட்டுவரும் இவ்வுலகில், நீங்கள் கொண்டுள்ள இந்தக் குடும்ப உணர்வு, ஒரு மாற்று அடையாளமாக விளங்குகிறது.

ஒரு சிலர் வளர்த்திருக்கும் சுயநலத்தின் விளைவாக, பெரும் நிலப்பரப்புக்களை அவர்கள் சொந்தமாக்கிக் கொண்டு, பல்லாயிரம் மக்களை வாழத் தகுதியற்ற இடங்களுக்கு தள்ளி விடுகின்றனர். இவ்வுலகம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள பொதுவான இல்லம் என்பதை மறுத்து வாழ்பவர்கள் இவர்கள்.

தண்ணீர், மின்சாரம், சாலை, பள்ளிகள், மருத்துவ மனைகள் போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டுள்ள நிலை, அநீதியான ஒரு நிலை. நகரங்களில் மக்கள் ஓரளவு மதிப்புடன் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முயற்சிகள் மேம்படுத்தப்படவேண்டும் என்று நான் மீண்டும் விண்ணப்பிக்கிறேன்.

நிலம், குடியிருப்பு, வேலை என்ற மூன்று உரிமைகளை அனைவரும் பெறும் வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, வறியோருக்கு உரிமையானவற்றை திருப்பித் தரும் கடனை செலுத்துகிறோம். இது மனிதாபிமான இரக்கத்தில் உருவாகும் செயல் அல்ல. இது, மனிதகுலத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை.

அன்பு சகோதர, சகோதரிகளே, ஒவ்வொரு குடும்பமும், தகுதியான குடியிருப்பு, குடிநீர், கழிப்பறை வசதி, மின்சாரம், பள்ளிகள், மருத்துவ மனைகள் போன்ற அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு ஒன்றிணைந்து செபிப்போம். உங்கள் குரலை இறைவன் கேட்டு, உங்களுக்கு அமைதியும், பாதுகாப்பும் வழங்குவாராக!

எனக்காக செபிக்க மறவாதீர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.