2015-11-26 15:15:00

நைரோபியில் 2வது நாளாக திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.26,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆப்ரிக்கத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளாகிய இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்கு பயண நிகழ்வுகளைத் தொடங்கினார். முதல் நிகழ்வாக, நைரோபி திருப்பீடத் தூதரகத்தில் கென்யாவின் கிறிஸ்தவ சபைகள், பிற மதப் பிரதிநிதிகள் என்று, 25 பேரைச் சந்தித்தார் திருத்தந்தை. கென்யாவின் நான்கு கோடியே ஐம்பது இலட்சம் மக்களில் ஏறக்குறைய முப்பது விழுக்காட்டினர் கத்தோலிக்கர். பிரிந்த  கிறிஸ்தவ சபையினர் 47.7 விழுக்காடு மற்றும் பிற மதத்தினர் இருபது விழுக்காடாகும். கத்தோலிக்க ஆயர் பீட்டர் கெய்ரோ, ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் பிரதிநிதி Eliud Wabukalabgcd, இஸ்லாம் மதத்தின் பிரதிநிதி Abdulghafur El-Busaidy ஆகிய மூவரும் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார்.

இச்சந்திப்பை முடித்து, அங்கிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற நைரோபி பல்கலைக்கழகம் சென்றார் திருத்தந்தை. ராயல் தொழில்நுட்ப கல்லூரி என்ற பெயரில் இப்பல்கலைக்கழகம் 1956ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது, 1961ல் நைரோபி ராயல் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகத்தோடு இணைந்து செயலாற்றுகின்றது. இந்த நைரோபி பல்கலைக்கழகத்தின் மத்திய பூங்காவில், கொட்டும் மழையிலும் கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்களை, திறந்த காரில் வலம்வந்து, ஆசிர்வதித்து திருப்பலி மேடைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இம்மேடை ஆப்ரிக்க மரபில் அமைக்கப்பட்டிருந்தது. இத்திருப்பலியை, பெரிய திரைகளில் Uhuru பூங்காவிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் பார்த்து இறையாசீர் பெற்றனர். இந்த Uhuru பூங்காவில்தான், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் தனது முதல் கென்யத் திருத்தூதுப் பயணத்தின்போது திருப்பலி நிறைவேற்றினார். நைரோபியின் மத்திய பூங்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் இந்திய இலங்கை நேரம் மதியம் 12.45 மணிக்குத் தொடங்கிய திருப்பலி ஆங்கிலம் மற்றும் ஸ்வாகிலி மொழிகளில் இடம் பெற்றது. வெறுப்பையும், வன்முறையையும் நியாயப்படுத்த இறைவன் பெயர் ஒருபோதும் பயன்படுத்தப்படக் கூடாது, ஒவ்வொரு விசுவாசியும் மறைப்பணியாளராக, வாழ்வை மாற்றும் நற்செய்தியை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும், நீதியான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று, இத்திருப்பலியில் இத்தாலிய மொழியில் ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார். கென்ய அரசுத்தலைவர் Uhuru Kenyatta, அவரது துணைவியார் உட்பட பல அரசு பிரமுகர்கள் கலந்து கொண்ட இத்திருப்பலியில் ஆப்ரிக்க மரபில் நடனங்களும் பாடல்களும் இடம்பெற்றன. இவை திருவழிபாட்டை சிறப்படையச் செய்து வளப்படுத்தின. இத்திருப்பலியின் துவக்கத்தில், வரவேற்புரை நிகழ்த்தினார் நைரோபி பேராயர் கர்தினால் ஜான் நுயெ.

இத்திருப்பலியை நிறைவுசெய்து மக்களை ஆசிர்வதித்து திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர், அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற தூய மேரி பள்ளிக்குச் சென்று அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. இதில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசியவர்களுள் ஒருவரான, கென்ய ஆயர் பேரவையின் அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் பணிக்குழுத் தலைவர் ஆயர் Anthony Ireri Mukobo அவர்கள், அர்ப்பணிக்கப்பட்டவர் வாழ்வு ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் கென்ய அருள்சகோதரிகள் அமைப்பின் தலைவர் அருள்சகோதரி Michael Marie Rottinghous, அருள்பணியாளர்கள் அமைப்பின் தலைவர் அருள்பணி Felix J. Phiri ஆகிய இருவரும் சாட்சியம் சொன்னார்கள். திருவழிபாடாக இடம்பெற்ற இச்சந்திப்பின் இறுதியில் Laudato Si…என்ற பாடல் பாடப்பட்டது.

இச்சந்திப்புக்குப் பின்னர் நைரோபியிலுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அலுவலகங்களுக்குச் சென்றார் திருத்தந்தை. வத்திக்கான் வளாகத்திலுள்ள ஸ்தூபி வரைபடத்தை இங்கு பரிசாக அளித்தார். இதுவே இவ்வியாழன் தினத்தின் கடைசி நிகழ்வாகும். சகிப்புத்தன்மை மற்றும் ஏழைகள் மீது அக்கறை காட்ட வலியுறுத்தும் திருத்தந்தையின் செய்தியை தான் வரவேற்பதாகவும், திருத்தந்தையின் செய்தியை தான் மிகுந்த ஆர்வத்துடன் கவனிப்பதாகவும் கென்ய நாட்டு முஸ்லிம் செனட்டர் Hassan Omar அவர்கள் சொல்லியுள்ளார். ஊழல், வறுமை, சமய தீவிரவாதம் போன்ற சவால்களை எதிர்நோக்கும் ஆப்ரிக்காவுக்கு திருத்தந்தையின் செய்தி மிகவும் முக்கியம் என்றும் செனட்டர் Omar அவர்கள் மேலும் சொல்லியுள்ளார். இவ்வெள்ளி பிற்பகலில் உகாண்டா நாட்டுக்குச் செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் கடைசியாக, வருகின்ற ஞாயிறன்று மத்திய ஆப்ரிக்க குடியரசு செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ். இன மற்றும் வகுப்புவாத மோதல்கள் நிறைந்துள்ள மத்திய ஆப்ரிக்க குடியரசுக்கு திருத்தந்தையை தான் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக விமான ஓட்டுனர் கூறியுள்ளார். அப்படி அவர் செல்லாவிட்டாலும், பாராசூட்டிலாவாது நான் நிச்சயமாக மத்திய ஆப்ரிக்க குடியரசு செல்வேன் என்று திருத்தந்தை கூறியதாகச் சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.