2015-11-25 15:58:00

திருத்தந்தையை வரவேற்கும் கென்யா நாடு – ஒரு கண்ணோட்டம்


நவ.25,2015. முதலில் அவர் பயண நிகழ்ச்சிகளைத் தொடங்கியுள்ள கென்யக் குடியரசின் எல்லைகளாக, வடக்கே எத்தியோப்பியாவும், கிழக்கே சொமாலியாவும், தெற்கே டான்சானியாவும், மேற்கே உகாண்டாவும், வடகிழக்கே சூடானும், தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளன. நிலநடுக் கோட்டில், கிழக்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள கென்யாவின் நிலப்பரப்பு, விக்டோரியா ஏரியிலிருந்து, துர்க்கானா ஏரிவரை பரவியுள்ளது. இதன் தலைநகரமான நைரோபி இந்நாட்டின் மட்டுமல்லாமல், கிழக்கு ஆப்ரிக்காவிலே பெரிய நகரமாகும். நைரோபி என்றால் Masai மொழியில், குளிர்ந்த தண்ணீரின் இடம் என்று பொருள். 1895ம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசு, கிழக்கு ஆப்ரிக்கப் பிரித்தானியாவை உருவாக்கியது.  அச்சமயத்தில், 1905ம் ஆண்டில் கிழக்கு ஆப்ரிக்க பிரித்தானியாவின் தலைநகராக இந்நகர் விளங்கியது. 1963ம் ஆண்டு டிசம்பரில் கென்யா சுதந்திரம் அடையும்வரை இந்நிலை நீடித்தது. இந்நகரில் நைரோபி நதி பாய்கிறது. அதோடு இயற்கைக் காடுகளும் உள்ளன. அதோடு நைரோபி பல சேரிகளையும் கொண்டுள்ளது. இங்குள்ள Kibera சேரி, ஆப்ரிக்காவிலே பெரியதாகும். ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் இச்சேரியில் வாழ்கின்றனர். மேலும், இந்நகரிலுள்ள Mitumba சேரி மிக ஏழ்மை நிலையில் உள்ளதாகும். மேலும், Kangemi சேரியை திருத்தந்தை இத்திருத்தூதுப் பயணத்தில் பார்வையிடுவார். பல்கலைக்கழகங்களும் நிறைந்துள்ள இந்நகரில் வர்த்தகமும் களைகட்டியுள்ளது. தேயிலை மற்றும் மலர்கள் ஏற்றுமதியில் உலகில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று.

கென்யாவில் 2014ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஏறக்குறைய 4 கோடியே 50 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளதால், வெப்பமண்டல காலநிலையைக் கொண்டிருக்கின்றது. அதோடு Diani, Bamburi, Kilifi உட்பட எண்ணற்ற அழகான கடற்கரைகளும், Lama போன்ற பல்வேறு உலகப் பாரம்பரிய இடங்களும் இந்நாட்டில் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் அனைத்துலக படகுப் பந்தயப் போட்டிகளும் கென்யாவில் நடைபெறுகின்றன. உலகில் 47வது பெரிய நாடாக உள்ள கென்யாவில், மார்ச் அல்லது ஏப்ரல் முதல், மே அல்லது ஜூன் வரை மழை காலமாகும். அக்டோபரிலிருந்து டிசம்பர் வரையும் மழைபெய்யும். இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர் நடமாட்டம் இருந்ததற்கான ஆதாரமாக எலும்புகள் கிடைத்துள்ளன. ஆப்ரிக்காவின் ஐந்து பெரிய விளையாட்டு விலங்குகள் எனப்படும், சிங்கம், சிறுத்தை, எருமை, காண்டாமிருகம், யானை ஆகியவை கென்யாவில் உள்ளன. போர்த்துக்கீசியர்கள் இந்தியாவுக்குச் சென்றபோது வழியில் கடந்து சென்ற கென்யாவில் 1498ம் ஆண்டில் கிறிஸ்தவத்தைப் பரப்பினர். இதற்குச் சாட்சியாக இருப்பது வாஸ்கோடகாமா எழுப்பிய தூணில் எழுதப்பட்டுள்ள வாசகமாகும். அகுஸ்தீன் சபையினர் இந்நாட்டில் முதலில் நற்செய்தி அறிவித்தனர். இதன் பயனாக, 1631ம் ஆண்டில் மொம்பாசா சுல்தான் Jeromino Chingulia கிறிஸ்தவத்தைத் தழுவினார். இதனால் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள் ஆரம்பித்தன. அவ்வாண்டு ஆகஸ்ட் 21ம் தேதி 150 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் மொம்பாசா மறைசாட்சிகள் என  அழைக்கப்படுகின்றனர். தற்போது கென்யாவில் கத்தோலிக்கர் 32.3%. பிரிந்த கிறிஸ்தவ சபையினர் 47.7% மற்றும் பிற மதத்தினர் 20%. இந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் ஸ்வாகிலி மற்றும் ஆங்கிலமாகும். நைரோபியில் வருகிற இவ்வியாழனன்று திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியில் 14 இலட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாளை தேசிய விடுமுறையாகவும் கென்ய அரசு அறிவித்துள்ளது.

கென்யத் தலைநகர் நைரோபியிலிருந்து உகாண்டா நாட்டிற்கு நவம்பர் 27, இவ்வெள்ளி பிற்பகலில் செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ். விமானப் பயணம் ஒரு மணி 20 நிமிடங்களே. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.