2015-11-25 15:49:00

திருத்தந்தையை எதிர்நோக்கும் உகாண்டா நாடு – ஒரு கண்ணோட்டம்


நவ.25,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்றாவதாகச் செல்லும் நாடு, உகாண்டா. உகாண்டா நாட்டின் வடக்கே தென் சூடான், கிழக்கே கென்யா, தெற்கே டான்சானியா, தென்மேற்கே ருவாண்டா, மேற்கே காங்கோ குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. எல்லாப் பக்கங்களிலும் நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ள நாடுகளில், எத்தியோப்பியாவுக்கு அடுத்தபடியாக, மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இரண்டாவது நாடாகும் இது. விக்டோரியா ஏரியின் ஒரு பகுதியையும் உகாண்டா கொண்டுள்ளது. எட்வர்ட், ஆல்பர்ட், கியோகா ஆகிய ஏரிகளும் இந்நாட்டில் உள்ளது. வெள்ளை நைல் நதி உகாண்டாவின் முக்கிய நதியாகும். நிலநடுக்கோட்டு வெப்பநிலையையே இந்நாடும் கொண்டிருக்கின்றது. புகாண்டா அரசிலிருந்து உகாண்டா என்ற பெயரைப் பெற்றுள்ள உகாண்டாவில், மக்கள், 1,700 முதல் 2,300 ஆண்டுகளுக்கு முன்னர்வரை, பொதுவாக வேட்டையாடுபவர்களாக இருந்தனர். 1894ம் ஆண்டிலிருந்து பிரித்தானியர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். பின்னர் 1962ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி இந்நாடு சுதந்திரம் அடைந்தது. அதன் பின்னர் இந்நாட்டில் மோதல்கள் நிறைந்தன. அண்மைக் காலம்வரை அந்நாட்டில் நீண்ட காலமாக உள்நாட்டுச் சண்டை நடைபெற்றது. மேலும், உகாண்டாவில் வாழும் பூர்வீக மக்கள் 1,700 முதல் 2,300 ஆண்டு வரலாற்றைக் கொண்டுள்ளனர். தந்த வர்த்தகத்தால் கவரப்பட்ட அராபிய வர்த்தகர்கள் 1830களில் கிழக்கு ஆப்ரிக்காவின் இந்தியப் பெருங்கடல் பகுதிப் பக்கம் வந்து குடியேறினர். பின்னர், நைல்நதியின் வளங்களைத் தேடி, 1860களில் பிரித்தானியர்கள் குடியேறினர். பிரித்தானிய ஆங்லிக்கன் மறைப்பணியாளர்கள் 1877ம் ஆண்டில் புகாண்டாவுக்கு வந்தனர். 1879ம் ஆண்டில் ப்ரெஞ்ச் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் குடியேறினர். புகாண்டா அரசில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே தொடர்ந்து சமய மோதல்கள் இடம்பெற்றன. பின்னர் 1890ம் ஆண்டில், பிரிந்த கிறிஸ்தவ சபையினருக்கும், கத்தோலிக்கருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன. இவ்வாறு உகாண்டாவில் இடம்பெற்ற பதட்டநிலைகளால் அப்பகுதியில் ஆதிக்கத்தை நிலைநாட்ட சங்கடங்களை எதிர்கொண்டாலும் நைல்நதியின் வளங்கள் பிரித்தானியாவை விட்டுவைக்கவில்லை.

கிழக்கு ஆப்ரிக்கப் பிரித்தானிய பேரரசு, 1890களில், பிரித்தானிய இந்தியாவிலிருந்து 32 ஆயிரம் தொழிலாளர்களை கிழக்கு ஆப்ரிக்காவுக்குக் கொண்டு வந்து உகாண்டா இரயில்வேயை அமைத்தது. ஆனால் அவ்வேலையில் உயிர்பிழைத்த பல இந்தியர்கள் நாடு திரும்பினர். ஆயினும், 6,723 இந்தியர்கள் கிழக்கு ஆப்ரிக்காவிலேயே தங்கி விட்டனர். அவர்களில் சிலர் வர்த்தகர்களானார்கள். பருத்தித் தொழில் வர்த்தகத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், பிரித்தானிய கப்பல்களில் எலிகள் இருந்ததால் அவை உகாண்டாவுக்குள் கொள்ளை நோயைப் பரப்பியது. இதில் 1900மாம் ஆண்டுகளில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர். பல நிலபரப்பை ஒன்று சேர்த்த பிரித்தானியர்கள், 1914ம் ஆண்டில் உகாண்டா நாட்டை உருவாக்கினர். 1900மாம் ஆண்டு முதல் 1920ம் ஆண்டு வரை தூங்கும் நோய் என்ற கொள்ளை நோய் பரவி 2,50,000த்துக்கு மேற்பட்ட மக்களின் உயிரைக் காவு கொண்டது.

உகாண்டா நாடு 1962ல் சுதந்திரமடைந்தது. 1971ல் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் சர்வாதிகாரி இடி அமின் ஆட்சியைக் கைப்பற்றி 8 ஆண்டுகள் கொடூர ஆட்சி நடத்தினார். இந்த இராணுவ ஆட்சியில் 3 இலட்சம் உகாண்டா மக்கள் இறந்தனர். அதோடு சிறுபான்மையாக இருந்த இந்திய வர்த்தகர்களை கட்டாயமாக வெளியேற்றினார். இதனால் நாட்டின் பொருளாதாரம் அழிந்தது. பின்னர் யொவேரி முசெவெனியின் ஆட்சி நடந்தது. இவரது ஆட்சிக் காலத்தில், 2வது காங்கோ சண்டையில், காங்கோ சனநாயக குடியரசை ஆக்ரமித்தார். இதில் 1998ம் ஆண்டிலிருந்து 54 இலட்சம் பேர் இறந்தனர். 24 ஆண்டுகள் இவரது ஆட்சி இந்நாட்டில் நடந்தது. பின்னர் 2005ம் ஆண்டில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பின் வழியாக மக்களாட்சி முறை அமைக்கப்பட்டது. ஆங்கிலமும், லுகாண்டாவும் ஆட்சி மொழிகளாக உள்ளன. நாட்டின் பொருளாதாரம் வேளாண்மையை நம்பி உள்ளது. உலகில் அதிக ஊழல் நிறைந்ததில் ஒன்றாக, உகாண்டாவின் பொதுத்துறை கணிக்கப்பட்டுள்ளது. உலகில் 175 மோசமான நாடுகளில் 142வது நாடாக 2014ம் ஆண்டில் இந்நாடு கூறப்பட்டுள்ளது. இந்நாட்டில் இடம்பெறும் ஊழலால் ஆண்டுக்கு 28 கோடியே 60 இலட்சம் டாலரை இந்நாடு இழக்கின்றது என்று உலக வங்கியின் உலகளாவிய நிர்வாகம் கூறியுள்ளது. உகாண்டாவின் பாராளுமன்றத்தினர், அந்நாட்டின் அரசு பணியாளர்கள் சம்பாதிப்பதைவிட அறுபது மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர். சித்ரவதைகளும் சட்டத்திற்குப் புறம்பேயான கொலைகளும் இந்நாட்டில் அண்மை ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. நல்ல நிலவளத்தைக் கொண்டு, தவறாத மழையையும் பெறும் உகாண்டாவில் இயற்கை வளங்களுக்கும் குறைவில்லை. உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றான இங்கு 84 விழுக்காட்டினர் கிராமப் பகுதிகளில் வாழ்கின்றனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.