2015-11-25 16:23:00

திருத்தந்தை பயன்படுத்துவது, அனைவருக்கும் புரியும் எளிய மொழி


நவ.25,2015. அனைவருக்கும் புரியும் எளிய மொழி, குறுகிய வாக்கியங்கள், ஒரு சில முக்கிய வார்த்தைகளை மீண்டும் சொல்லுதல் ஆகிய பண்புகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரைகளில் பயன்படுத்துகிறார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தும் சொல்லாடல்" ("The vocabulary of Pope Francis") என்ற தலைப்பில், தூரின் நகரைச் சார்ந்த அருள்பணி அந்தோனியோ காரியேரோ (Antonio Carriero) அவர்கள் எழுதியுள்ள ஒரு நூலை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் எழுதிவைத்துள்ள உரைகளிலிருந்து விலகி, சுதந்திரமாகப் பேசும்போது, அவர் சொல்லும் வார்த்தைகள் உள்ளத்திலிருந்து எழுவதை உணர முடிகிறது என்று கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

யூதர்கள் மத்தியில், பாரம்பரியப் படிப்பினைகளின் தொகுப்பெனக் கருதப்படும் Talmud என்ற நூலில் "மனதிலிருந்து எழும் வார்த்தைகள், மனதைச் சென்றடையும்" என்று கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், ஆன்மாக்களின் மேய்ப்பராக விளங்கும் திருத்தந்தையின் வார்த்தைகள், மக்களை நேரடியாகச் சென்றடைகின்றன என்று கூறினார்.

இறைவனை ஒரு நறுமணத் தைலமாக பயன்படுத்துவதை, "God spray" என்ற சொற்றொடராலும், குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு செவிலித் தாயாக திருஅவையை நினைத்துப் பார்க்கக் கூடாது என்பதை சொல்ல "babysitter" என்ற சொற்றொடரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தியதை எடுத்துக்காட்டாகக் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை பயன்படுத்தும் உருவகங்களும், சொற்றொடர்களும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளன என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.