2015-11-25 16:03:00

ஆப்ரிக்காவில் திருத்தந்தை – திருத்தூதுப் பயண கண்ணோட்டம்


நவ.25,2015. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலகில் பல நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பை வலுப்படுத்தி வரும் இந்நாள்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி மற்றும் ஒப்புரவு செய்தியுடன் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு தனது 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை இப்புதனன்று தொடங்கியுள்ளார். வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர், காலை 7.15 மணிக்கு, அவ்வில்லத்தில், 11 பெண்களையும், அவர்களுடன் ஆறு சிறாரையும் சந்தித்தார் திருத்தந்தை. இத்தாலி, உக்ரேய்ன், ருமேனியா, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இப்பெண்கள், வீட்டு வன்முறைக்கும், பாலியல் முறைகேடுகளுக்கும் பலியானவர்கள். இத்தாலியின் Lazio மாநிலத்தில் ஒரு துறவு சபை நடத்தும் புலம்பெயர்ந்தவர் இல்லத்தில் வாழும் இப்பெண்களை ஆசீர்வதித்த பின்னர், காரில் உரோம் லெயோனார்தோ தாவின்ச்சி பன்னாட்டு விமான நிலையம் சென்றார் திருத்தந்தை. அங்கு, அரசு மற்றும் திருஅவை அதிகாரிகள் வழியனுப்ப, விமானப் பணியாளர்களைக் கைகுலுக்கி,   வழக்கம்போல தனது கறுப்புநிறப் பையுடன் A 330 ஆல் இத்தாலியா விமானத்தில் ஏறினார் திருத்தந்தை. உள்ளூர் நேரம் காலை 7.45 மணிக்குத் விமானம் கென்யா நாடு நோக்கிப் புறப்பட்டது.

தான் வழியில் கடந்து செல்லும் கிரீஸ், எகிப்து, சூடான், மற்றும் எத்தியோப்பிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கு செபமும், நல்வாழ்த்தும் நிறைந்த தந்திச் செய்திகளையும் அனுப்பினார். இத்தாலிய மக்களுக்காகத் தான் செபிப்பதாக திருத்தந்தை அனுப்பிய தந்திச் செய்திக்குப் பதில் செய்தியையும் இத்தாலிய அரசுத்தலைவர் Sergio Mattarella அவர்கள் அனுப்பியுள்ளார். திருத்தந்தையின் இந்த முதல் ஆப்ரிக்கத் திருத்தூதுப் பயணத்தை இத்தாலியும் அனைத்துலக சமுதாயமும் மிகுந்த ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன. போர், அரசியல் உறுதியற்றநிலை, வறுமை, சமூக சமத்துவமின்மை ஆகியவை ஆப்ரிக்காவின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. திருத்தந்தையின் பிரசன்னம் இந்நாடுகளின் கிறிஸ்தவ சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் மற்றும் அமைதி, உடன்பிறப்பு உணர்வு, உடையாடல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் என்ற தனது நம்பிக்கையையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

7 மணி 15 நிமிடங்கள் கொண்ட இந்த விமானப் பயணத்தில் தன்னோடு பயணம் செய்த பன்னாட்டு பத்திரிகையாளர்களை ஒவ்வொருவராக கைகுலுக்கி வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். கென்யத் தலைநகர் நைரோபியின் Jomo Kenyatta அனைத்துலக விமான நிலையத்தை திருத்தந்தை சென்றடைந்த போது உள்ளூர் நேரம் மாலை 5 மணியாகும். அப்போது இந்திய இலங்கை நேரம் இப்புதன் மாலை 7.30 மணியாகும். விமான நிலையத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அரசு மாளிகைக்கு திருத்தந்தை காரில் சென்ற போது வழியெங்கும் ஆரவாரத்துடன் மக்கள் கூட்டம். ஆப்ரிக்க மக்களின் வரவேற்பை சொல்லால் வருணிக்க முடியாது. நைரோபி அரசு மாளிகையில் 21 துப்பாக்கிகள் அரச வரவேற்பைப் பெற்றார். பின்னர் கென்ய அரசுத்தலைவர் Uhuru Kenyatta அவர்களை மரியாதை காரணமாகச் சந்திப்பது, கென்ய அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றுவது, பின்னர் நைரோபி திருப்பீட தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் செல்வது இப்புதன் பயணத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

ஆறு நாள்கள் கொண்ட இந்த 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய மூன்று நாடுகள் ஒவ்வொன்றிலும் இரு நாள்கள் செலவிடுவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருத்தூதுப் பயணத் திட்டங்களை நிறைவு செய்து நவம்பர் 30, வருகிற திங்களன்று உரோம் நேரம் மாலை 6.45 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.