2015-11-23 15:46:00

முஸ்லிம்களுக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி


நவ.23,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கென்யா, உகாண்டா மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடுகளுக்கு அனுப்பியிருக்கும் காணொளிச் செய்தியை, தனது நாட்டு முஸ்லிம் நண்பர்களுக்கு வழங்குவதற்காக, பல கிலோ மீட்டர் தூரம் பத்திரிகையாளர்களுடன் பயணம் மேற்கொள்வதாக Bangui பேராயர் Dieudonné Nzapalainga அவர்கள் கூறியுள்ளார்.

2012ம் ஆண்டிலிருந்து அரசியல் பதட்ட நிலைகளை அனுபவிக்கும் பகுதிக்குச் சென்று, தனது பல்சமய நண்பர்களுக்கு அச்செய்தியை வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார் பேராயர் Nzapalainga.

மத்திய ஆப்ரிக்க ஆயர் பேரவைத் தலைவராகிய பேராயர் Dieudonné Nzapalainga அவர்கள், அந்நாட்டின் இஸ்லாம் அவைத் தலைவர் இமாம் Oumar Kobine Layama, இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் தலைவர் பாஸ்டர் Nicolas Guérékoyaméné-Gbangou ஆகியோருடன் ஒரு நல்ல சமய நல்லிணக்க உறவை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பல்சமயத் தலைவர்களுடன் இணைந்து, நாட்டில் ஒன்றிப்பு, நல்லிணக்கம்,  மன்னிப்பு ஆகியவற்றை தொடர்ந்து ஊக்குவிக்கவிருப்பதாக அறிவித்தார் பேராயர் Nzapalainga.

மேலும், நைஜீரியா, கென்யா, லிபியா, புர்க்கினா ஃபாசோ, மாலி, லெபனான், பிரான்ஸ், இன்னும் உலகின் பிற பகுதிகளில் இடம்பெறும் பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஆப்ரிக்க ஆயர்கள், மோதல்களில் ஈடுபட்டுள்ள எல்லாரும் ஆயுதங்களைக் கைவிட்டு உரையாடல் பாதையைத் தேர்ந்துகொள்ளுமாறு இறைவன் பெயரால் கேட்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.