2015-11-23 15:59:00

திருத்தந்தை : கிறிஸ்துவின் அரசு விடுதலையளிப்பது


நவ.23,2015. ஆயுதங்களின் அச்சமும், சூழ்ச்சிகளும் நிறைந்துள்ள இந்த உலகில், கிறிஸ்துவின் அரசின் வல்லமை, உண்மையிலும் அன்பிலும் காணப்படுகின்றது என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, கிறிஸ்து அரசர் பெருவிழா பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் அரசின் பலம் அன்பு என்று கூறினார்.

நம்மீது ஆதிக்கம் செலுத்துகின்ற மற்றும் நம்மைப் பொருள்களாக நடத்துகின்ற அரசர் அல்ல கிறிஸ்து, ஆனால் அவர் நம்மை, தம் மாண்புக்கு உயர்த்துகின்றவர் என்றும், கிறிஸ்துவின் அரசு, நம்மை அடக்கி ஒடுக்காமல், நம் பலவீனங்கள் மற்றும் நம் துன்பங்களிலிருந்து நம்மை விடுவிப்பது என்றும், ஒப்புரவு மற்றும் மன்னிப்புப் பாதையில் நம்மை ஊக்குவிப்பது என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசு பிலாத்துவிடம், தமது அரசு இவ்வுலகு சார்ந்தது அல்ல என்று கூறும் யோவான் நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி விளக்கிய திருத்தந்தை, இவ்வுலகம் சொல்லும் காரண காரியங்களும், நற்செய்தி கூறும் காரண காரியங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றும் கூறினார்.

இவ்வுலகின் காரண காரியங்கள், போட்டியிலும், புகழார்வத்திலும் வேரூன்றியுள்ளன, மேலும், அவை, பயத்தின் ஆயுதங்கள், மனச்சான்றைச் சூழ்ச்சியுடன் கையாள்தல் மற்றும் அச்சுறுத்தி சாதிப்பதைக் கொண்டு போராடுகின்றன என்றும் உரைத்த திருத்தந்தை, நற்செய்தி கூறும் காரண காரியங்கள், தாழ்மையிலும், நன்றியுணர்விலும், உண்மையின் பலத்திலும் வெளிப்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.

கிறிஸ்தவர்க்கு அதிகாரமும், வல்லமையும் என்பது, திருச்சிலுவையின் வல்லமை மற்றும் இயேசுவின் அன்பின் சக்தியாகும் என்றும், இவ்வன்பு, புறக்கணிப்புக்கு மத்தியிலும், எப்பொழுதும் முழுமையானதாகவும், உறுதியானதாகவும் அமைந்திருக்கும் என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.