2015-11-23 15:31:00

Antigua–Barbuda குடியரசின் ஆளுனர், திருத்தந்தை சந்திப்பு


நவ.23,2015. Antigua மற்றும் Barbuda குடியரசின் ஆளுனர் Sir Rodney Williams அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

Antigua மற்றும் Barbuda ஆளுனர் Williams அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையே உறவுகளின் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகியோரையும் சந்தித்தார்

திருப்பீடத்திற்கும், Antigua மற்றும் Barbuda குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், இன்னும், அக்குடியரசில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள், குறிப்பாக, மனித மாண்பை ஊக்குவிப்பதற்கு எடுத்துவரும் முயற்சிகள், கல்வி, தேவையில் இருப்போர்க்கு உதவி போன்ற தலைப்புக்கள் இச்சந்திப்புக்களில் இடம் பெற்றன.

மேலும்,  இப்பணிகளை Antigua மற்றும் Barbuda குடியரசும், தலத்திருஅவையும் ஒன்றிணைந்து  ஆற்ற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும், இத்தீவுப் பகுதி எதிர்கொள்ளும் குடியேற்றதாரர், பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சனைகளும் இச்சந்திப்புக்களில் இத்தலைவர்கள் கலந்துரையாடினர் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்தது.  

அட்லாண்டிக் பெருங்கடலும், கரீபியன் கடலும் சந்திக்கும் இடத்தில் தீவுகளின் கூட்டமாகிய Antigua மற்றும் Barbuda குடியரசின் அரசுத்தலைவர் பிரித்தானிய அரசியாவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.