2015-11-21 15:40:00

திருத்தந்தை : கருணைப் பண்பு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்


நவ.21,2015. கருணைப் பண்பைக் கற்றுக் கொள்வது மற்றும் அதனைப் போதிப்பதற்கு தங்களை அர்ப்பணிப்பதன் வழியாக, தற்போதைய உலகில் இடம்பெறும் போரின் கொடுமைகளுக்குப் பதிலளிக்குமாறு, உலகின் கல்வியாளர்களைக் கேட்டுக்கொண்டார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

கருணை நிறைந்த செயல்களை, குறிப்பாக, பதினான்கு கருணைச் செயல்களைக் கற்று அவற்றை போதிப்பதன் வழியாக, இன்றைய உலகின் போரின் மனிதப் பண்பற்ற செயல்களுக்குப் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வானகத் தந்தையின் பணியாகிய கருணையின் பணிகளை நினைத்துப் பார்க்குமாறும் கூறினார்.

கத்தோலிக்க கல்வி குறித்த Gravissimum educationis என்ற 2ம் வத்திக்கான் பொதுச் சங்க விதித் தொகுப்பு வெளியிடப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருப்பீட கத்தோலிக்க கல்வி பேராயம் கடந்த நான்கு நாள்களாக நடத்திய ஒரு பெரிய பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், இன்னும், உரோம் பல்கலைக்கழக மாணவர்கள் என ஏறக்குறைய ஏழாயிரம் பேரை இச்சனிக்கிழமையன்று அருளாளர் 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து, இப்பிரதிநிதிகளின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொன்னார் திருத்தந்தை.

19ம் நூற்றாண்டில் வட இத்தாலியில் இடம்பெற்ற மாசோனிய அச்சுறுத்தலுக்கு புனித தொன்போஸ்கோ பதில் கூறிய முறையை எடுத்துக்காட்டாகக் கூறிய திருத்தந்தை, அறிவின் மொழி, மனதின் மொழி, கரங்களின் மொழி என, மூன்று வகை மொழிகள் உள்ளன என்றும் கூறினார்.

இம்மூன்று மொழிகளும் இணக்கத்துடன் செல்ல வேண்டும் என்றும், உண்மையான கிறிஸ்தவக் கல்வி எல்லாவற்றையும் கடந்த இறைவனை நெருங்கிச் செல்ல உதவுவதாய் அமைய வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

பள்ளிகளில் ஒருபோதும் மதமாற்ற முயற்சிகள் இடம்பெறக் கூடாது என்றும், கிறிஸ்தவத்தில் கல்வி கற்பது என்பது, மனித விழுமியங்களைக் கற்பதாகும், இளையோரும், சிறாரும் மனித விழுமியங்களில் முன்னோக்கிச் செல்வதற்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.