2015-11-20 16:03:00

திருஅவையை உயிரூட்டம் பெறச் செய்ய யூபிலி ஆண்டு உதவுவதாக


நவ.20,2015. ஒப்புரவு மற்றும் திருநற்கருணை அருளடையாளங்களின் பலன்களை மீண்டும் கண்டுணர்வதற்கு இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நல்ல வாய்ப்பை வழங்குகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலையில் ஜெர்மன் நாட்டு ஆயர்களிடம் கூறினார்.

அட் லிமினா சந்திப்பை முன்னிட்டு, ஜெர்மன் ஆயர்களை, திருப்பீடத்தில் சந்தித்து அவர்களுக்குத் தான் தயாரித்து வைத்திருந்த உரையை அவர்களிடம் வழங்கிய பின்னர், அவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடிய திருத்தந்தை, ஜெர்மனியில் கத்தோலிக்கர் மத்தியில் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கு கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதையும் சுட்டிக் காட்டினார்.

வருகிற டிசம்பர் 8ம் தேதி ஆரம்பிக்கவுள்ள, இரக்கத்தின் யூபிலி ஆண்டை திருஅவையை உயிர்த்துடிப்புடன் அமைப்பதற்கு பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1960களில் ஜெர்மனியில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் விசுவாசிகள் எல்லா ஞாயிறுகளிலும் திருப்பலியில் கலந்து கொண்டனர், ஆனால் இக்காலத்தில் இந்நிலை பத்து விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ளது என்றும் கூறிய திருத்தந்தை, ஜெர்மனியில் அருளடையாளங்களில் விசுவாசிகள் கலந்து கொள்வது மிகவும் குறைவு என்றும் கூறினார்.

ஒப்புரவு, உறுதிபூசுதல், திருமணம் ஆகிய அருளடையாளங்களை மிக மிகச் சில கத்தோலிக்கரே பெறுகின்றனர் மற்றும் குருத்துவ, துறவற வாழ்வுக்கான இறையழைத்தல்களும் மிகவும் குறைந்துள்ளன என்றுரைத்த திருத்தந்தை, கடந்த காலத்தின் நல்ல நாள்களை மீண்டும் கட்டியெழுப்புமாறு ஜெர்மன் நாட்டு ஆயர்களைக் கேட்டுக்கொண்டார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.