2015-11-20 16:20:00

உக்ரேய்ன் அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு


நவ.20,2015. உக்ரேய்ன் அரசுத்தலைவர் Petro Poroshenko அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

உக்ரேய்னின் நெருக்கடி நிலைக்கு அரசியல் முறையில் தீர்வு காணவும், Minsk ஒப்பந்தத்தை முழுமையாய் செயல்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கவும் உக்ரேய்ன் அரசுத்தலைவரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

உக்ரேய்ன் அரசுத்தலைவர் Poroshenko அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையே உறவுகளின் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகியோரையும் சந்தித்தார்

திருப்பீடத்திற்கும், உக்ரேய்ன்க்கும் இடையே நிலவும் நல்லுறவுகளை மீண்டும் உறுதிப்படுத்திய அதேவேளை, அந்நாட்டின் மோதல் சூழல்களோடு தொடர்புடைய விடயங்களை இச்சந்திப்பில் பேசிய இத்தலைவர்கள், இம்மோதல்களோடு தொடர்புடைய எல்லா தரப்பினரும் ஒன்றிணைந்து இதற்கு அரசியல் முறையில் தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எதிர்நோக்கும் மனிதாபிமான நெருக்கடிகள், நலவாழ்வு பிரச்சனைகள், கைதிகள்  பரிமாற்றம், சமூக மற்றும் பொருளாதாரச் சரிவு போன்றவை குறித்தும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டது.

மேலும், உக்ரேய்ன்க்கு வருகை தருமாறு தான் விடுத்த அழைப்பை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டார் என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார் அரசுத்தலைவர் Petro Poroshenko.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.