2015-11-20 16:21:00

இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறுத்தப்பட்டிருப்பதற்கு வரவேற்பு


நவ.20,2015. இந்தோனேசியாவில் வருங்காலத்தில் மரண தண்டனை கைதிகளுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்படாது என்று அரசு அறிவித்திருப்பதை, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் திருஅவை அதிகாரிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

2.6 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை இந்தோனேசியாவுக்குள் கொண்டுவர முயற்சித்தார் என்று, பிலிப்பைன்ஸ் நாட்டு 30 வயது மேரி ஜேன் வெலோசோ என்ற பெண் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஏப்ரலில் அத்தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆயினும், அத்தண்டனை கடைசி நிமிடத்தில் தள்ளி வைக்கப்பட்டது.

இந்தோனேசிய அரசின் இந்நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த, சனநாயகத்திற்கான Setara பல்கலைக்கழகச் செயலர் அருள்பணி Benny Susetyo அவர்கள், மரண தண்டனையைவிட பொருளாதார வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்த அரசு தீர்மானித்திருப்பதை இது காட்டுகின்றது என்று கூறினார்.

அந்நாடு மரண தண்டனைக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்பதை இது காட்டுகின்றது என்றும் கூறிய அருள்பணி Susetyo அவர்கள், வெலோசோவின் வாழ்வு காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

இந்தோனேசியாவில், பிரேசில், நெதர்லாண்ட்ஸ், ஆஸ்திரேலியா, நைஜீரியா நாடுகளின் குடிமக்கள் உட்பட இவ்வாண்டில் இதுவரை 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.