2015-11-19 16:14:00

வாழ்வுக்கு அழைக்கும் இறைவனை நம்புங்கள் - பாரிஸ் பேராயர்


நவ.19,2015. அர்த்தமேயற்ற முறையில் நம் உறவினர் பலர் கொலையுண்டிருப்பது நம்மை மிக ஆழ்ந்த, தீராத வேதனையில் ஆழ்த்துகிறது என்று, பாரிஸ் பேராயர், கர்தினால் André Vingt-Trois அவர்கள் கூறினார்.

நவம்பர் 13, வெள்ளியன்று இரவு பாரிஸ் மாநகரில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கும் காயமுற்றோருக்கும் நோத்ரு தாம் பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலியில், கர்தினால் Vingt-Trois இவ்வாறு மறையுரை வழங்கினார். காரணமும், அர்த்தமும் கண்டுபிடிக்க முடியாத இந்த வன்முறைக்கு நாம் இருவழிகளில் பதிலிருக்கலாம், ஒன்று, இதை மறப்பதற்கு 'அமைதிப்படுத்தும் மருந்துகளைத்' தேடலாம், அல்லது, 'வாழ்வின் இறைவனைத்' தேடலாம் என்று கர்தினால் Vingt-Trois அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

மரணம் எப்போது, எவ்விதம் நம்மை வந்து சேரும் என்பதை அறியமுடியாத மனித வாழ்வில், நம்மை மீண்டும் வாழ்வுக்கு அழைக்கும் இறைவன் நம் இதயக் கதவைத் தட்டியபடியே நிற்கிறார் என்ற எண்ணமே, ஓரளவு பொருள் தரும் என்று கர்தினால் Vingt-Trois அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.