2015-11-19 15:30:00

போர்க்கருவி வர்த்தகர்களுக்கே போரினால் பலன் உண்டாகிறது


நவ.19,2015. இன்றும் இயேசு தொடர்ந்து அழுகிறார், ஏனெனில், நாம் இன்னும் பகைமையை, வெறுப்பை, போரை விரும்பித் தேடுகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும், கோவிலைப் பார்த்து அழுதபடியே, "இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா?" என்ற கேள்வியை எழுப்பினார் என்று கூறப்பட்டுள்ள நற்செய்திப் பகுதியை (லூக்கா 19: 41-44) மையப்படுத்தி, திருத்தந்தை தன் மறையுரையை வழங்கினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை ஆற்றியத் திருப்பலியில், அண்மித்து வரும் கிறிஸ்மஸ் காலத்தில் விழாக்கள், விருந்துகள், இவற்றுடன், போரும் தொடர்ந்து நடைபெறும் என்பதை தன் மறையுரையில் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

நாம் மேற்கொள்ளும் போர்களால் என்ன மீதம் உள்ளது என்ற கேள்வியை எழுப்பியத் திருத்தந்தை, கல்வி இன்றி தவிக்கும் ஆயிரமாயிரம் குழந்தைகள், எக்குற்றமும் இன்றி தினமும் இறந்துகொண்டிருக்கும் அப்பாவி மக்கள் இவர்களே, போர்களால் நாம் காணும் மீதங்கள் என்று சுட்டிக்காட்டினார்.

போர்க்கருவிகளைச் செய்து இலாபம் சேர்க்க விழையும் செல்வந்தர்களுக்கே போரினால் பலன் உண்டாகிறது என்றும், அவர்களே போரை விரும்பித் தேடுகின்றனர் என்றும் கூறியத் திருத்தந்தை, 'அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்' என்று கூறிய இயேசுவை இவர்கள் வெறுக்கின்றனர் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

அர்த்தம் ஏதுமின்றி நடைபெறும் உயிர் பலிகளைக் கண்டு, இறைவன் அழுகிறார், இயேசுவும் அழுகிறார் என்று கூறியத் திருத்தந்தை, அணுகிவரும் இரக்கத்தின் யூபிலி காலத்தில், அமைதியை நோக்கி மனித குலம் மனமாற்றம் பெறவேண்டும் என்று மன்றாடுவோம் என்ற விண்ணப்பத்துடன் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

மேலும், "அனைத்து மனிதர்களும், நாம் அனைவருமே, இறைவனின் கண்களுக்கு முக்கியமானவர்கள்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கச் செய்தியாக ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.