2015-11-19 16:02:00

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா புனிதக் கதவு சுவர் நீக்கம்


நவ.19,2015. உரோம் மறைமாவட்டத்தின் பேராலயமான புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் உள்ள புனிதக் கதவை மூடியிருந்த சுவர், இத்திங்களன்று நீக்கப்பட்டது.

2000மாம் ஆண்டு நடைபெற்ற யூபிலி கொண்டாட்டங்களுக்குப் பின் மூடப்பட்ட இக்கதவிற்கு முன் எழுப்பப்பட்ட சுவர், உரோம் மறைமாவட்டத்தில் திருத்தந்தையின் சார்பாகப் பணியாற்றும், கர்தினால் Agostino Vallini அவர்கள் முன்னிலையில் உடைக்கப்பட்டது.

இச்சுவருக்குள் புதைக்கப்பட்டிருந்த ஒரு வெண்கலப் பெட்டியில், 41 வில்லைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் உருவம் பொறித்த தங்க வில்லை; 23 வெள்ளி வில்லைகள், அத்திருத்தந்தை பணியாற்றிய 23 ஆண்டுகளைக் குறிப்பதாகவும், 17 வெண்கல வில்லைகள், 1983 மற்றும் 2000 ஆகிய இரு யூபிலி ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைக் குறிப்பதாகவும் அமைந்திருந்தன.

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் உள்ள புனிதக் கதவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 13, திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.