2015-11-19 16:07:00

தாஜ் மஹாலுக்கு அருகிலுள்ள மயானத்தை அகற்ற உத்தரவு


நவ.19,2015. இந்தியாவின் புகழ்பெற்ற நினைவிடமான தாஜ் மஹாலுக்கு அருகேயுள்ள மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மயானத்தில் மரக்கட்டைகளைக் கொண்டு தகனங்கள் நடைபெறுவதால், அதிலிருந்து வெளியாகும் புகை, தாஜ் மஹாலுக்கு கேடு ஏற்படுத்துகிறது என நீதிமன்றம் கூறியுள்ளது.

மயானத்திலிருந்து எழும் புகை காரணமாக 400 ஆண்டுகள் பழமையான அந்த நினைவிடம், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக நீதிபதி ஒருவர் தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் வாழும் இந்துக்கள் பெரும்பாலும் மரக்கட்டைகளை பயன்படுத்தியே தகனங்களைச் செய்துவரும் நிலையில், மரக்கட்டைகளை பயன்படுத்தி உடலைத் தகனம் செய்வதற்கு பதிலாக, மின் மயானங்களை ஏற்படுத்துமாறும் உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

ஆக்ரா நகரிலிருந்து வெளியேறிவரும் மாசுக்கள் மற்றும் அருகாமையிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றிலிருந்து வெளியேறும் புகை ஆகியவற்றால், தாஜ் மஹால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 400 ஆண்டளவாக வெளிர்நீல நிறத்துடன் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்த தாஜ் மஹால், கடந்த சில ஆண்டுகளாகவே மஞ்சள் நிறமாக மாறி வருவதாகச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.