2015-11-18 15:29:00

நீடித்து நிலைக்கும் முன்னேற்றம் இன்றி, அமைதி உருவாகாது


நவ.18,2015. போரினால் அல்ல, அமைதியால் மட்டுமே முன்னேற்றப்பாதையில் மனித சமுதாயம் நடக்க முடியும் என்று ஐ.நா.அவை கூறிவருவதை மீண்டும் ஒரு முறை நிலைநாட்டும் வாய்ப்பு வந்துள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுதல் என்ற தலைப்பில், ஐ.நா.பாதுகாப்பு அவை இச்செவ்வாயன்று நடத்திய கூட்டத்தில், ஐ.நா.பொதுஅவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

அண்மைக் காலங்களில் பாரிஸ், பெய்ரூட் நகரங்களில் நிகழ்ந்த வன்முறைத் தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு பேராயர் அவுசா அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் திருப்பீடத்தின் சார்பில் அஞ்சலியை செலுத்தினார்.

நீடித்து நிலைக்கும் முன்னேற்றம் இன்றி, அமைதி உருவாகாது என்றும், அமைதி இன்றி, நீடித்து நிலைக்கும் முன்னேற்றம் உருவாகாது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்தை, தன் உரையில் வலியுறுத்திய பேராயர் அவுசா அவர்கள், அமைதியின்றி தவிக்கும் நாடுகளில் மில்லென்னிய இலக்குகள் தூரத்து கனவுகளாகி வருகின்றன என்று எடுத்துரைத்தார்.

மனித சமுதாயத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் கொணர, மனிதாபிமான கொள்கைகள் கொண்ட அடிப்படைக் குழுக்களும், மத நம்பிக்கை கொண்ட குழுக்களும் ஆற்றக்கூடியப் பணிகள் மிக அவசியம் என்பதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட, உலக நாடுகள் பெருமளவு பணத்தைச் செலவிடுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் கூறிய திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் அவுசா அவர்கள், இந்தப் பணத்தைக் கொண்டு, நீடித்து நிலைக்கும் முன்னேற்றத்தை உலக நாடுகள் பெறமுடியும் என்று சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.