2015-11-18 15:22:00

சிறார், துறவியருக்காக திருத்தந்தை வேண்டுகோள்


நவ.18,2015. சிறார்கள் அடிமைகளாக்கப்படாமலும்,  தவறான முறையில் நடத்தப்படாமலும் இருக்கும் வகையில் குழந்தைகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்று இப்புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 20, வருகிற வெள்ளியன்று உலகம் முழுவதும் சிறப்பிக்கப்பட உள்ள,  உலக குழந்தைகள் தினம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, குழந்தைகளின் இன்றைய நிலை குறித்து, குறிப்பாக, ஆயுதம் ஏந்திய குழுக்களால் சிறார்கள் ஆயுதம் ஏந்த வைக்கப்படுவது குறித்து, அனைத்துலக சமுதாயம் விழிப்புடன் செயல்படும் என நான் நம்புகிறேன் என்றும் கூறினார்.

அதேவேளை, குடும்பங்களும், குழந்தைகளின் பள்ளிக்குச் செல்லும் உரிமை மற்றும் கல்வி கற்பதற்கு இருக்கும் உரிமைகளை உறுதிச் செய்பவர்களாக செயல்படுவார்களாக, என்ற ஆவலையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், நவம்பர் 21, வருகிற சனிக்கிழமையன்று, 'அன்னை மரி, கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட விழா' சிறப்பிக்கப்பட உள்ளது குறித்தும் எடுத்துரைத்து, ஆண், பெண் துறவிகளின் இறையழைத்தல்களுக்காக இந்நேரத்தில் நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம், தங்கள் செபம் மற்றும் மௌனப் பணிகள் வழியாக, அடைபட்ட மடங்களில் இருந்து சேவையாற்றும் துறவிகளுக்கு நாம் வழங்கும் ஆன்மீக மற்றும் பொருளுதவிகளுடன் அவர்களுக்கு அருகாமையில் இருப்போம் எனவும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.