2015-11-18 15:36:00

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் பதியப்படுவதில்லை


நவ.18,2015. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற, அமைதியற்ற நிலையை, திருப்பீடம் அக்கறையுடனும், கவலையுடனும் கவனித்து வருகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு நிறுவனமான OSCE என்ற அமைப்பு, வெறுப்பு குற்றங்கள் என்ற மையக் கருத்துடன் வியென்னா நகரில் நடத்திவரும் ஒரு பன்னாட்டுக் கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் அருள்பணி  Janusz Urbanczyk அவர்கள் இச்செவ்வாயன்று வழங்கிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மனித சமுதாயத்தில் நிலவும் வெறுப்பு குற்றங்களில், மத நம்பிக்கையின் அடிப்படையில் எழும் குற்றங்களே மிக அதிகம் என்பதை தன் உரையில் சுட்டிக் காட்டிய, அருள்பணி Urbanczyk அவர்கள், இக்குற்றங்களில் பல, அரசுகளால் பதியப்படாமல் விடப்படுவது, இக்குற்றங்கள் பெருகுவதற்கு வழி வகுக்கிறது என்று கூறினார்.

உலகின் பல நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறுப்பு குற்றங்கள் செய்வோர், மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது உடைமைகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிற்கும் தீங்கு  விளைவிக்கின்றனர் என்பதை, அருள்பணி Urbanczyk அவர்கள், தன் உரையில் வருத்தத்துடன் கூறினார்.

OSCE அமைப்பின் உறுப்பினர் நாடுகளில், வெறுப்பு குற்றங்கள் என்று கூறும்போது, இனம், மொழி, நாடு என்ற அடிப்படை அம்சங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன என்றும், வெறுப்பு குற்றங்கள் என்பதில், மதமும் ஒரு முக்கிய அம்சமாக இணைக்கப்பட வேண்டும் என்றும் அருள்பணி Urbanczyk அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.