2015-11-18 15:22:00

கிறிஸ்தவத் திருப்பயணங்கள், உடல் ஒறுத்தல், இரக்கச் செயல்கள்


நவ.18,2015. கிறிஸ்தவர்கள், இவ்வுலகில் திருப்பயணிகளாக வாழும்போது, திருஅவையின் மூலைக்கல், இரக்கம் என்பதைப் புரிந்துகொள்கின்றனர் என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வத்திக்கானில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றினார்.

"ஒரே கடவுளை வழிபடும் மூன்று மதங்களில் திருப்பயணமும், இரக்கச் செயல்களும்" என்ற தலைப்பில், உரோமையத் திருப்பயணம் என்ற அமைப்பினர், வத்திக்கானில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், கர்தினால் பரோலின் அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவ மதத்திற்கு அதிகாரம் அளித்து அரசாணை வழங்கியதும், விவிலியத் தொடர்பான இடங்களுக்கு திருப்பயணங்கள் ஆரம்பமாயின என்ற வரலாற்றுக் குறிப்புடன் கர்தினால் பரோலின் அவர்கள் துவக்கிய உரையில், கத்தோலிக்கத் திருஅவைக்கும் திருப்பயணத்திற்கும் உள்ள தொடர்புகளை விளக்கிக் கூறினார்.

கிறிஸ்தவத் திருப்பயணங்கள், உடல் ஒறுத்தல் மற்றும் இரக்கச் செயல்கள் ஆகிய இரு முக்கிய கூறுகளைக் கொண்டவை என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவ வாழ்வே ஒரு திருப்பயணம் என்பதை, இரண்டாம் வத்திக்கான் சங்கம் வலியுறுத்தியுள்ளது என்பதை தன்  உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், நெருங்கிவரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டில் திருப்பயணங்களின் முக்கியத்துவத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மடலில் கூறியுள்ளதையும் நினைவுகூர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.