2015-11-18 15:43:00

கத்தோலிக்கக் கல்வி நிலையங்கள், மாணவர்கள் - புள்ளி விவரங்கள்


நவ.18,2015. உலகெங்கும் கத்தோலிக்கத் திருஅவை நடத்திவரும் பள்ளிகளின் எண்ணிக்கை, கடந்த 40 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது என்றும், அந்த எண்ணிக்கை உயர்வு, ஆப்ரிக்கக் கண்டத்தில் அதிக அளவு ஏற்பட்டுள்ளது என்றும் கத்தோலிக்கக் கல்வி பேராயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"கல்வி இன்றும் நாளையும்: மறுமலர்ச்சி பெறும் ஓர் ஆர்வம்" என்ற தலைப்பில், இப்புதனன்று உரோம் நகரில் துவங்கியுள்ள ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கையொட்டி, கத்தோலிக்கக் கல்வி  நிலையங்கள், மாணவர்கள் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை கத்தோலிக்கக் கல்வி பேராயம் வெளியிட்டுள்ளது.

1971ம் ஆண்டுக்கும், 2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஆப்ரிக்க நாடுகளில் 36,407 கத்தோலிக்கக் கல்வி நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன என்றும், இந்த 40 ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை, 1 கோடியே, 68 இலட்சத்து 9 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்ரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஆசிய நாடுகளில், 23,467 கல்வி நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன என்றும், இதன் பயனாக, 1971ம் ஆண்டு, 62 இலட்சத்து 42 ஆயிரமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, 2013ம் ஆண்டு, 1கோடியே, 23 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக உலக அளவில், கத்தோலிக்கக் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை, 2013ம் ஆண்டு, 2,15,784 என்றும், மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, 5,86,25,290 என்றும் இப்புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.