2015-11-17 16:00:00

“நலவாழ்வின் கலாச்சாரம் : இப்பூமியின் பணியில்” கருத்தரங்கு


நவ.17,2015. “நலவாழ்வின் கலாச்சாரம் : மனித மற்றும் இப்பூமியின் பணியில்” என்ற தலைப்பில் வருகிற வியாழனன்று வத்திக்கானில் தொடங்கவிருக்கும் முப்பதாவது அனைத்துலக கருத்தரங்கு குறித்து இச்செவ்வாயன்று, பேராயர் Zygmunt Zimowski அவர்கள் தலைமையிலான குழு, பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கியது.

இம்மாதம் 19 முதல் 21 வரை நடைபெறும் அனைத்துலக கருத்தரங்கு குறித்து திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் விளக்கிய, திருப்பீட நலவாழ்வு அவை தலைவர் பேராயர் Zimowski அவர்கள், இக்கருத்தரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘Laudato si’ திருமடலுக்கு மேய்ப்புப்பணிகளில் பதிலளிப்பது   குறித்த சிந்தனைப் பகிர்வுகள் இடம்பெறும் என்று அறிவித்தார்.

பாரிசில் ஆரம்பிக்கவுள்ள காலநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாட்டிற்கு, இக்கருத்தரங்கு பரிந்துரைகளை முன்வைக்கும் என்றும், நோயாளிகளுக்கு ஆற்றும் மேய்ப்புப் பணிகளில் இறைவனின் கருணையை மேலும் அதிகமாய்க் காட்டும் முறைகள் பற்றி விவாதிக்கப்படும் என்றும் பேராயர் Zimowski அவர்கள் தெரிவித்தார்.

இந்தியா, இஸ்ரேல், தாய்வான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என உலகின் அறுபது நாடுகளிலிருந்து ஏறக்குறைய 500 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள் என்றும், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வத்திக்கான் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றி இதனை ஆரம்பித்து வைப்பார் என்றும் பேராயர் Zimowski அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.