2015-11-17 14:21:00

கடுகு சிறுத்தாலும் – தடுக்கி விழுந்த தற்பெருமை


ஒரு சிற்றூரில் பிறந்த வளர்ந்த இளைஞர் ஒருவர், அருகிலிருந்த பெருநகருக்கு சட்டம் பயிலச் சென்றார். சட்டப்படிப்பை முடித்தபின், தன் சொந்த ஊரிலேயே தொழிலைத் துவங்க விழைந்தார். அது சிற்றூர் என்பதால், அங்கு வழக்கறிஞராக வேலை செய்தால், ஊர் மக்கள் மத்தியில் தனக்கு பேரும், புகழும் பெருகும் என்று எண்ணி, அந்த முடிவெடுத்தார்.

'வழக்கறிஞர்' என்ற பெயர் பலகையுடன் ஓர் அலுவலகத்தைத் துவக்கினார் இளைஞர். ஆனால், ஊரில் அவர் எதிர்பார்த்த அளவு வேலையோ, மரியாதையோ அவருக்குக் கிடைக்கவில்லை. அவரது அலுவலகத்திற்கு தொலைபேசி இணைப்பு கிடைப்பதற்கு பல முயற்சிகள் செய்தும், ஒரு வாரமாக பலனில்லை. இருந்தாலும், ஊர்மக்கள் முன் தன் மதிப்பை உயர்த்த அரும்பாடு பட்டார் இளைஞர்.

வேலை எதுவும் இல்லாமல், ஒரு நாள், இளைஞர் தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, அவரது அலுவலகம் நோக்கி ஒருவர் வருவதை, கண்ணாடி சன்னல் வழியே பார்த்தார். வருபவர் தன்மீது பெரும் மதிப்பு கொள்ளவேண்டும் என்று தீர்மானித்த அவர், மேசைமீது இருந்த தொலைபேசியை எடுத்து, யாருடனோ பேசுவதுபோல் நடிக்க ஆரம்பித்தார்.

வாசலில் வந்து நின்றவரை உள்ளே வந்து அமரும்படி கையால் சைகை காட்டியபடியே, இளைஞர் தொலைபேசியில் தன் உரையாடலைத் தொடர்ந்தார்: "அதெல்லாம் சரிப்பட்டு வராது, சார். நான் பத்து இலட்சத்துக்கு குறைந்து, எந்த வழக்கிலும் 'ஆஜர்' ஆக மாட்டேன். இதை, மும்பையிலே இருக்கிற உங்கள் முதலாளிகிட்ட சொல்லிடுங்க.... நான் நாளைக்கே சென்னைக்குப் போகணும், அடுத்தவாரம், டில்லியிலே கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு அப்படியே மும்பை வரேன். அதுவரை எனக்கு நேரமில்லை சார்..." என்று தொலைபேசியில் ஐந்து நிமிடங்கள் பேசினார், இளைஞர். வந்தவர், இதையெல்லாம் கேட்டுக்கொண்டு, பொறுமையோடு அமர்ந்திருந்தார்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தொலைப்பேசியை கீழே வைத்தபடி, வந்திருந்தவரிடம், "உங்களுக்கு நான் என்ன செய்யணும், சார்?" என்று இளைஞர் கேட்டார். வந்திருந்தவர் பொறுமையாக, "நான் ‘டெலெபோன் கம்பெனி’யிலிருந்து வரேன், சார். உங்க 'போனு'க்கு 'கனெக்சன்' கொடுக்கணும்" என்று சொன்னார்.

உயிரற்று கிடந்த அந்தத் தொலைபேசி, இளைஞரைப் பார்த்து சிரித்ததைப் போல் இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.