2015-11-17 15:23:00

இரட்டை வேட வாழ்வைத் தவிர்த்து நடக்க திருத்தந்தை அழைப்பு


நவ.17,2015. கிறிஸ்தவத் தனித்துவத்தைக் காத்துக்கொள்வதன் முக்கியத்துவம், இரட்டை வேடமிட்டு வாழ்வதைத் தவிர்த்தல் ஆகிய இரு தலைப்புகளை மையமாக வைத்து இச்செவ்வாய் காலை மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நீதியற்ற சட்டங்களுக்குத் தன்னை உட்படுத்துவதைவிட கொல்லப்படுவதைத் தேர்ந்தெடுத்த, வயதான 90 வயது யூத மறைநூல் அறிஞர் எலயாசர் பற்றி மக்கபேயர் 2ம் நூலிலிருந்து எடுக்கப்பட்ட வாசகத்தை (2மக். 6,18-31) மையப்படுத்தி, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார் திருத்தந்தை.

90 வயது எலயாசர் பன்றி இறைச்சி சாப்பிடுவதற்கு மறுத்தார் மற்றும் அவரின் இவ்வுலக நண்பர்கள் மறைசாட்சி வாழ்வைத் தவிர்ப்பதற்குச் சொன்ன ஆலோசனைகளையும் புறக்கணித்தார்.

உலகப்போக்கு ஆன்மீகம், முன்னுக்குப் பின் முரண்பட்ட வாழ்வு வாழ்வதற்கு நம்மை சோதிக்கின்றது, இத்தகைய வாழ்வில், நாம் வாழும் வழி ஒன்றாகவும், வெளியில் நாம் போடும் வேடம் மற்றொன்றாகவும் உள்ளது, இதை ஏற்பதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால் மரப்புழு மெல்ல மெல்ல பொருள்களை அழிப்பது போன்று, உலகப்போக்கு நம் கிறிஸ்தவத் தனித்துவத்தை மெதுவாக இழப்பதற்கு நம்மை இட்டுச்செல்லும் என்று எச்சரித்தார் திருத்தந்தை.

கிறிஸ்தவத் தனித்துவம், ஒருபோதும் தன்னலம் பற்றிய ஆணவத்தை வெளிப்படுத்துவதாக இருக்காது, ஆனால் அது எப்போதும் துர்மாதிரிகைகளைத் தவிர்த்து, பிறருக்கு உதவும் நல்ல எடுத்துக்காட்டாக அமையும் என்றும் கூறினார் திருத்தந்தை.

எனவே நாம் பாவிகள் என்பதை தாழ்மையுடன் ஏற்று, கிறிஸ்தவராக வாழ்வது போன்று நடிக்காமல், உண்மையான கிறிஸ்தவராக வாழ ஆண்டவரிடம் வேண்டுவோம் என்று தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், 2016ம் ஆண்டு சனவரி 17ம் தேதி ஞாயிறு மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் யூதமத தொழுகைக் கூடத்திற்குச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தையர் 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரும் இங்கு சென்றுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.