2015-11-17 15:44:00

இயேசுவைத் தவிர அனைத்தையும் இழந்தேன் - கந்தமால் கிறிஸ்தவர்


நவ.17,2015. இந்தியத் திருஅவை உயிர்த்துடிப்புள்ளது மற்றும் ஆற்றலுடன் செயல்படுவது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தியத் திருஅவையை அன்புகூர்கிறார் என்று கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறினார்.

மும்பையில் இஞ்ஞாயிறன்று நிறைவடைந்த இந்திய தேசிய திருநற்கருணை மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதியாக கலந்துகொண்ட கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், இம் மாநாட்டை நிறைவு செய்த திருப்பலியில் இவ்வாறு கூறினார்.

இந்தியாவின் 168 மறைமாவட்டங்களிலிருந்தும் ஆயிர்க்கணக்கான பிரிதிநிதிகள் தங்களின் மறைமாவட்ட கொடிகளுடன் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு, வங்காளம், பீஹார், உத்தர பிரதேசம், இந்னும் வட மாநிலங்களிலிருந்து விசுவாசிகள்  தங்களின் சாட்சிய வாழ்வையும் பகிர்ந்தனர்.

2008ம் ஆண்டில் ஒடிசாவின் கந்தமாலில் கிறிஸ்தவர்க்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையில் தப்பிப் பிழைத்த கனக ரேகா நாயகா (Kanaka Rekha Nayaka)  என்ற தாய், இயேசுவைத் தவிர எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று சாட்சி சொன்னார்.

தனது இரு பிள்ளைகளும், கணவரும் கொல்லப்படுவதையும், தனது வீடு பற்றி எரிவதையும் நேரில் பார்த்த இந்தத் தாயின் சாட்சிய வாழ்வு, கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதைக் காட்டுகின்றது என்று, இம்மாநாட்டில் அறிவித்தார், கர்தினால் கிரேசியஸ்.

மும்பையில் 1964ம் ஆண்டில் இடம்பெற்ற 38வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பால் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு காணொளிப்படமாக கடந்த வார மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது.

அத்தடன், இத்திருத்தந்தையின் புனிதப் பொருளும் கடந்த சனிக்கிழமையன்று விசுவாசிகளின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.