2015-11-16 15:34:00

வாரம் ஓர் அலசல் – இதுவும் கடந்து போகும்


நவ.16,2015. அன்பு நெஞ்சங்களே, கடந்த வாரத்தில் உலகில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், கடும் வெள்ளத்திற்கும், சாலை விபத்துகளுக்கும் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தி இன்றைய வாரம் ஓர் அலசலைத் தொடங்குகின்றோம். பலியானவர்கள் இறைவனின் நிறைசாந்தியில் இளைப்பாறட்டும், அவர்களின் குடும்பங்கள் இழப்பைத் தாங்கிக்கொள்வதற்கு இறைவன் சக்தி அருளட்டும் எனச் செபிப்போம். நவம்பர் 15, இஞ்ஞாயிறன்று, சாலை விபத்துக்களில் பலியானவர்களை நினைவுகூரும் உலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 12 இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். இவர்களில் 15க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட இளையோரே அதிகம் என்று ஐ.நா. கூறுகிறது. சாலை பாதுகாப்பு விதிகள் எவ்வளவுதான் மேம்படுத்தப்பட்டாலும், சாலை விபத்துகளில் இறப்பவர்கள் மற்றும் காயமடைபவரின் எண்ணிக்கை உலகுக்கு அதிர்ச்சியையே கொடுக்கின்றது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார். தேவையில்லாமல் இடம்பெறும் இவ்விறப்புகள் குறித்து அரசுகள் சிந்திக்க வேண்டுமென்றும் தனது செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாரத்தில் பிரேசில் அரசு, சாலை பாதுகாப்பு குறித்த 2வது உலக உயர்மட்ட அளவிலான மாநாட்டை நடத்துகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் ஏறக்குறைய 1,500 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் பல அப்பாவி உயிர்கள் பலியாவதைத் தடுக்கும் என நம்புவோம்.

திடீர் விபத்துக்களில் பலியாகும் மனித உயிர்கள் பற்றிக் குறிப்பிடும்போது, கடந்த வாரத்தில் பெய்ரூட், பாக்தாத், பாரிஸ் போன்ற நகரங்களில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் பற்றி நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இஞ்ஞாயிறன்று துருக்கி நாட்டின் Antalya நகரில், G20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கியுள்ளது. இம்மாநாடு பற்றிப் பேசிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், அனைத்து மனித சமுதாயத்தையும் அச்சுறுத்திவரும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு உலகத் தலைவர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அதேநேரம், இந்நடவடிக்கைகள், அனைத்துலகச் சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதிப்பதாயும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அன்பர்களே, உலகையே உலுக்கியுள்ள பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்கள் சிரியாவிலிருந்து திட்டமிடப்பட்டதாகவும், பிரான்சிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் எனவும் ப்ரெஞ்ச் பிரதமர் Manuel Valls அவர்கள் இத்திங்களன்று அறிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரிஸ் உணவு விடுதிகள், இசைக் கச்சேரி அரங்கு மற்றும் கால்பந்து விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய அனைவரும் தற்கொலை அங்கி அணிந்து கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளை வைத்திருந்தனர் எனக் கூறப்படுகின்றது. மனித வாழ்வைப் புனிதமாக மதிக்காத மனிதர்கள் நடத்திய துன்ப இயல் நிகழ்வு இது. இத்தாக்குதல்கள் பற்றி கடந்த சனிக்கிழமையும், இஞ்ஞாயிறு மூவேளை நண்பகல் செப உரையின் இறுதியிலும் பேசிய மிகுந்த வேதனையுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "இத்தாக்குதல்கள் மனிதர்களால் நடத்தப்பட்டது என்பதை நினைக்கும்போது மனது ஆழ்ந்த துயரமடைகின்றது. பிரான்சை இரத்தத்தில் மிதக்க வைத்திருக்கும் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பிரான்சை மட்டுமல்ல, அகில உலகையே அசைத்துள்ள இந்தக் கொடூர நிகழ்வை நடத்துவதற்கு மனித இதயங்களால் எப்படி திட்டமிட முடியும்? என்று நினைக்கவே வியப்பாக உள்ளது. வார்த்தையால் சொல்லமுடியாத அளவுக்கு மனித மாண்பை இழிவுபடுத்தும் செயல் என்றே, இவ்வன்முறைகளுக்கு எதிராய் எவரும் கண்டனம் தெரிவிக்க முடியும். வன்முறை மற்றும் வெறுப்பின் பாதை ஒருபோதும் மனித சமுதாயத்தின் பிரச்சனைகளைத் தீர்க்காது என்பதை நான் மீண்டும் மிக உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். இவற்றை நியாயப்படுத்த கடவுளின் பெயரைப் பயன்படுத்துவது தேவநிந்தனை" என்று ஆணித்தரமாக கூறிய திருத்தந்தை, ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் மற்றும் அந்நாட்டு மக்களுக்குத் தனது ஆழ்ந்த உடன்பிறப்பு உணர்வு அனுதாபங்களைத் தெரிவித்தார். உலகில் அனைவர் இதயங்களிலும் ஞானம் மற்றும் அமைதி எண்ணங்கள் விதைக்கப்படுமாறும், அகில உலகு, ஐரோப்பா மற்றும் திருஅவையின் முதல் மகளாகிய அன்புக்குரிய ப்ரெஞ்ச் நாட்டை பாதுகாக்குமாறும், கருணையின் அன்னை மரியாவிடம் செபிப்போம் என்றும் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த அறுபதாயிரம் விசுவாசிகளிடம் திருத்தந்தை கூறினார். மேலும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், நாம் அனைவரும் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில், மனஅமைதியோடு, இறைவனில் நம்பிக்கை வைத்து நிகழ்காலத்தில் வாழ்வதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இக்காலத்தில் நடக்கும் செயல்களைப் பார்க்கும்போது நம்பிக்கையில் வாழ்வது சற்று கடினம்தான். ஆயினும் இவ்வுலகின் சோதனைகள் மற்றும் துன்பங்களின் மத்தியில் நம் அனைவருக்கும் நம்பிக்கையாக இறைவன் இருக்கிறார். நம் இவ்வுலக வாழ்வுப் பயணத்தின் முடிவாக நமக்கு இருப்பது மட்டுமின்றி, நம் வாழ்வில் என்றும், எப்போதும் தொடர்ந்து நம்முடன் இருக்கிறார் இறைவன். இவ்வுலகின் முடிவு பற்றி முன்னறிவிக்கும் காட்சியாளர்கள், போலி இறைவாக்கினர்களுக்கு எதிராக இருக்கிறார் நம் இறைவன். நம் எதிர்காலம் பற்றிய நாள், நட்சத்திரம் பார்ப்பதிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு அவர் விரும்புகிறார், அதேநேரம், இன்றைய வாழ்வில், நிகழ்கால வாழ்வில் நாம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் நம் இறைவன் விரும்புகிறார். உங்களில் எத்தனை பேர் தினமும் உங்கள் ராசிபலனை வாசிக்கிறீர்கள்? இப்படி ராசிபலன் பார்க்க நீங்கள் விரும்பும்போது இயேசுவை நோக்குங்கள், நீங்கள் நம்பியிருக்கும் உங்கள் இறைவனை நோக்குங்கள். அவர் உங்கள் வாழ்வை மேம்படுத்துவார். இக்காலத்திலும், இயற்கை மற்றும் நன்னெறிப் பேரிடர்களுக்கும், எல்லா வகையான துன்பங்களுக்கும் பற்றாக்குறை கிடையாது. ஆனால் எல்லாம் கடந்து போகும், இறைவன் ஒருவரே, அவரின் வார்த்தைகள் மட்டுமே நிலைத்திருந்து அவை நம் வாழ்வுக்கு வழிகாட்டும் விளக்காக அமையும் என்று திருத்தந்தை கூறினார்.

அன்பு நெஞ்சங்களே, கடந்த காலத்தையும், வருங்காலத்தையும், நிகழ்காலத்தையும் பற்றிச் சொல்வதற்கு, நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில்மேல் பூனை. இன்று என்பது மரகத வீணை என்பார்கள். எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடல் வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. ஆனால் அந்த ஏக்கத்திலே நிகழ்காலத்தில் வாழாமல் இருப்பதுதான் தவறு. அன்பர்களே, சுவாசத்தை நம் உடம்புக்குள் இழுத்து இவ்வுலக வாழ்வைத் தொடங்குகிறோம். சுவாசத்தை வெளியே விட்டு இவ்வுலக வாழ்வை முடித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் இடைப்பட்ட காலமே நமது இவ்வுலக வாழ்வு. இரவு போய் பகல். பகல் போய் இரவு. எனவே இந்த வாழ்வு நிரந்தரமானது அல்ல. இந்த வாழ்வில் எல்லாமே கடந்து போகின்றன. நேற்று  நாம் சந்தித்த இன்னல்கள் இன்று மறைந்து போவதில்லையா? இதை உணராமல் இருப்பதால்தான் நம் ஆசைகள், ஏக்கங்கள், கோபதாபங்கள், பகைமைகள், பழிவாங்கும் எண்ணங்கள் என, எல்லாவற்றையும் மனதிற்குள்ளே புதைத்து வைத்து கஷ்டப்படுகிறோம்.

அன்பர்களே, நவம்பர் மாதத்தில் நீத்தாரை அதிகமாக நினைக்கின்றோம். சமாதிகளுக்கும், கல்லறைகளுக்கும் சென்று நம்மைவிட்டுப் பிரிந்தவர்களை நினைத்து மலர்கள் சாற்றுகிறோம், தீபங்கள் ஏற்றுகிறோம். அவர்கள் பற்றிய பசுமையான நினைவுகளை மனதிற்குள் அசைபோடுகிறோம். கல்லறை என்றால், கல்+அறை என்பதாகும். அதாவது கல்லறை, கற்கும் இடமாகும். கல்லறை, இறந்தவர்களின் வாழ்வு நமக்கு விட்டுச் சென்றுள்ள பாடம் என்ன என்று சிந்திக்கும் இடமாகும். இறந்தவர்கள் நம்மிடம் என்ன சொல்கிறார்கள்?

ஓர் அரசர் தனது அரசவை அறிஞர்களிடம், நான் எனக்காக ஒரு அழகான மோதிரம் செய்யப் போகிறேன். அதில் மிகச் சிறந்த வைரங்கள் பதிக்கப் போகிறேன். அந்த மோதிரத்திற்குள் மிக இக்கட்டான சமயத்தில் படித்தால் எனக்கு உதவக் கூடிய ஒரு செய்தியை வைத்திருக்க விரும்புகிறேன். அது மிகவும் சிறியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதை மோதிரத்தில் பதிக்கும் வைரத்தின் கீழே மறைத்து வைக்கமுடியும். அப்படி ஒரு செய்தி வேண்டும் என்று கேட்டார். ஆனால் அரசவை அறிஞர்களால் இச்சிறிய செய்தியை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆயினும், அரசரை சிறுவயதிலிருந்தே பாதுகாப்பாக வளர்த்து வந்த வயதான பணியாள் ஒருவர் அரசரிடம், அப்படிப்பட்ட செய்தி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஒருமுறை உங்கள் தந்தையைப் பார்க்க வந்த ஒரு ஞானி இந்தச் செய்தியை எனக்கு அளித்தார் எனக்கூறி, அச்செய்தியை ஒரு சிறுதாளில் எழுதி அதைச் சுருட்டி அரசரிடம் கொடுத்து, இதை இப்போது படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமும் முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் இதைத் திறந்து பாருங்கள் என்றார். அந்த நேரமும் விரைவிலேயே வந்தது. அந்த நாட்டின்மீது படையெடுப்பு நடந்தது. அரசர் தனது நாட்டை போரில் இழந்தார். அவர் தனது குதிரையில் தப்பித்து ஓடினார். அவரது பின்னால் எதிரிப் படை வீரர்கள் குதிரையில் துரத்தி வந்தனர். அரசர் ஒரு மலைமுகடுக்கு வந்து விட்டார். திடீரென அவருக்கு மோதிரத்தின் நினைவு வந்தது. அவர் அந்த மோதிரத்தை திறந்து, அந்த தாளை எடுத்தார், அதில் இதுவும் கடந்து போகும் என்ற வாசகத்தை படித்தார். அரசரை பின்தொடர்ந்து வந்த எதிரிகள் வழி மாறி போய் விட்டனர், வேறு வழியில் அவரை தேடிச் சென்று விட்டனர். பின்னர் ஒரு சமயம், அரசர், தனது படைகளைத் திரட்டிக் கொண்டு வந்து, திரும்பவும் போராடி தனது அரசை வென்றார். அவர் தனது தலைநகரத்தில் வெற்றியோடு நுழையும்போது, அந்த வாசகத்தை திரும்பவும் வாசித்துப் பார்க்குமாறு அந்தப் பணியாள் சொன்னார்(சூஃபி கதை).

ஆம். இன்பத்திலும், இன்னலிலும், இதுவும் கடந்து போகும் என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டால்,  எந்நிலையிலும் நாம் நிலைகுலைய மாட்டோம். பருவகாலமும் மாறுகிறது. மனிதர்களும் மாறுகிறார்கள். எனவே எல்லாமே மாறும் இறைவனைத் தவிர. எனவே, அன்பர்களே, எந்நேரமும், எந்நிலையிலும் இறைவன் உங்களோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு, துன்பத்திலும் இன்பத்திலும், இந்த நிமிடமும் கடந்துபோகும் என்று சொல்லிப் பாருங்கள். வாழ்வில் அமைதி கிடைக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.