2015-11-16 15:25:00

வன்முறையை நியாயப்படுத்த கடவுளின் பெயரைப் பயன்படுத்துவது தேவநிந்தனை


நவ.16,2015. வன்முறையை நியாயப்படுத்த கடவுளின் பெயரைப் பயன்படுத்துவது தேவநிந்தனை என்று இஞ்ஞாயிறு மூவேளை நண்பகல் செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாரிசிலும், அதைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் இவ்வெள்ளியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை மற்றும் வெறுப்பின் பாதை ஒருபோதும் மனித சமுதாயத்தின் பிரச்சனைகளைத் தீர்க்காது என்பதை நான் மீண்டும் மிக உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். இவற்றை நியாயப்படுத்த கடவுளின் பெயரைப் பயன்படுத்துவது தேவநிந்தனை என்று கூறினார்.

பிரான்சை இரத்தத்தில் மிதக்க வைத்திருக்கும் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன என்றும், பிரான்சை மட்டுமல்ல, அகில உலகையே அசைத்துள்ள இந்தக் கொடூர நிகழ்வை நடத்துவதற்கு மனித இதயங்கள் எப்படி திட்டமிட முடியும்? என்று நினைக்கவே வியப்பாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

வார்த்தையால் கூறமுடியாத அளவுக்கு மனிதமாண்பை இழிவுபடுத்தும் செயல் என்றே, இவ்வன்முறைகளுக்கு எதிராய் எவரும் கண்டனம் தெரிவிக்க முடியும் என்றுரைத்த திருத்தந்தை, ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் மற்றும் அந்நாட்டு மக்களுக்குத் தனது ஆழ்ந்த அன்புணர்வு அனுதாபங்களைத் தெரிவித்தார்.

உலகில் அனைவர் இதயங்களிலும் ஞானம் மற்றும் அமைதி எண்ணங்கள் விதைக்கப்படுமாறும், அகில உலகு, ஐரோப்பா மற்றும் திருஅவையின் முதல் மகளாகிய அன்புக்குரிய ப்ரெஞ்ச் நாட்டை பாதுகாக்குமாறும், கருணையின் அன்னை மரியாவிடம் செபிப்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.