2015-11-16 15:13:00

மனிதத்தை மையப்படுத்துவது, கிறிஸ்தவ அடையாளத்தை அழித்துவிடும்


நவ.16,2015. இயேசுவுக்குப் பதிலாக, மனிதத்தை மையப்படுத்தும் எண்ணப் போக்கு, கிறிஸ்தவ தன்னடையாளத்தை அழித்துவிடும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை வழங்கிய மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

வேற்றினத்தாரின் எண்ணங்களுடன் சமரசம் செய்துகொண்ட இஸ்ரயேல் குலத்தவரைப் பற்றி, மக்கபேயர் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட வாசகம் கூறும் எண்ணங்களை மையப்படுத்தி, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், திருத்தந்தை மறையுரை வழங்கினார்.

இவ்வுலகில் வாழும் கிறிஸ்தவர்கள், தவறானக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இயேசு என்ற மையத்தை மாற்ற முயலும்போது, கிறிஸ்தவம் அழிந்துபோகிறது என்று, திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

உலகப் போக்குடன் இணைந்து செல்லும் கிறிஸ்தவர்கள், "நாங்களும் மற்றவர்களைப் போன்றவர்களே" என்று சொல்லிக் கொள்வது, தங்கள் மனசாட்சி எழுப்பும் சங்கடமான கேள்விக்கு அளிக்கும் சாக்குப் போக்கு என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

நம்மையும் அறியாமல் நமக்குள் புகுந்து, வேர்விட்டு வளர்ந்துவிடும் உலகப் போக்கிலிருந்து நம்மைக் காத்து, தனித்துவம் மிக்க கிறிஸ்தவத் தன்னடையாளத்தைக் காக்க இறைவன் நமக்குத் துணைபுரிவாராக என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.