2015-11-16 16:09:00

பாரிஸ் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மத நம்பிக்கையாளர்கள் கண்டனம்


நவ.16,2015.   ஐரோப்பாவின் அடையாளமாகக் கருதப்படும் நாடுகளில் ஒன்றான பிரான்சை ஜிகாதிகள் குறிவைத்து தாக்கியிருப்பதற்கு, பாகிஸ்தான் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தங்களின் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்

பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருஅவையின் தேசிய நீதி மற்றும் அமைதி அவை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், விசுவாசத்தைக் காரணம் காட்டி அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கூறப்பட்டுள்ளது.

இழப்பீடு செய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கிக்கொள்வதற்கு இறைவனிடம் செபிப்பதாக கூறும் இவ்வறிக்கையில், பயங்கரவாதத்திற்கெதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வன்முறை உலகில் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என்றும், ஐரோப்பாவில் வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு அச்சுறுத்தலின் ஆதாரமாக அமையும் என்றும் பாகிஸ்தான் முஸ்லிம் ஆர்வலர் பேராசிரியர் Musadeq Hussain அவர்கள் கூறினார்.

ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் வழங்கிவரும் ஆதரவு பலவீனமடையும் மற்றும் இராணுவ, பேரரசுக் கொள்கைகளை இவ்வன்முறை வலுப்படுத்தும் என்று Hussain அவர்கள் மேலும் கூறினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.