2015-11-16 15:33:00

தீவிரவாத தடுப்பு முயற்சிகள் மனித உரிமைகளை மதிக்கவேண்டும்


நவ.16,2015. தீவிரவாதத்திற்கு எதிராக அரசுகள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் சக்திவாய்ந்ததாக இருக்கும் அதே வேளையில், அவை, மனித உரிமைகளை மதிக்கும் முயற்சிகளாக அமையவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

துருக்கி நாட்டின் அந்தால்யா (Antalya) நகரில், நவம்பர் 15, இஞ்ஞாயிறன்று துவங்கியுள்ள G 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள பான் கி மூன் அவர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

கடந்த நான்கு நாட்களில் மட்டும், பெய்ரூட், பாக்தாத், பாரிஸ் ஆகிய நகரங்களில் பல அப்பாவி உயிர்களைக் கொன்றுள்ள தீவிரவாதத் தாக்குதல்களுக்கு சரியான பதிலிறுக்க அரசுகள் கடமைப் பட்டுள்ளன என்று கூறினார், பான் கி மூன்.

தீவிரவாத தாக்குதல்களை தடுப்பது எவ்விதம் என்று, அரசுகள் கலந்து பேசும்போது, தீவிரவாத வன்முறைக்கு மனிதர்களை கட்டாயப்படுத்தும் சமுதாயக் காரணங்களையும் கண்டுபிடிப்பது அவசியம் என்று பான் கி மூன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மேலும், வருகிற டிசம்பர் மாதம், பாரிஸ் மாநகரில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்ற உலக உச்சி மாநாடு, காலநிலை மாற்றமும், சமுதாய முன்னேற்றமும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதை உணர்ந்து, முடிவுகள் எடுக்கும் தான் நம்புவதாக ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.